திமுக மீது பொய்யான குற்றச்சாட்டு - உதயநிதி ஸ்டாலின் காட்டம்

திமுக மீது பொய்யான குற்றச்சாட்டு - உதயநிதி ஸ்டாலின் காட்டம்

8 புரட்டாசி 2026 செவ்வாய் 06:25 | பார்வைகள் : 204


காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நிறைவடைந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் இன்று சட்டசபையில் பதிலளித்து பேசினார். அப்போது, திமுக ஊழல்கள் செய்ததாக அமலாக்கத்துறை கூறியிருப்பதாக ஆதாரங்களுடன் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, முதல்-அமைச்சரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க எதிர்க்கட்சிக்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் திமுகவினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து, சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

### “பொய் குற்றச்சாட்டு”

அவர் கூறியதாவது:

“தவெகவின் 114 நாட்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதை ஆதாரங்களுடன் நாங்கள் தெரிவித்தோம். முதல்-அமைச்சர் இன்று மொத்தம் 45 நிமிடங்கள் பேசினார். அதில் 10 நிமிடங்கள் காவல்துறை குறித்து கூறினார். அதன்பிறகு, எந்தவித ஆதாரமும் இல்லாமல் எங்கள் மீது குற்றச்சாட்டுகளை முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்தார்.

நானும், சட்டமன்ற உறுப்பினர்களும் எழுந்து, எங்களுக்கு பதில் கூற வாய்ப்பு வழங்க வேண்டும் என சபாநாயகரிடம் கேட்டோம். ஆனால், எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் எங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வெளிநடப்பு செய்துள்ளோம்.

எங்களது கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் பதில் அளிக்கவில்லை. இன்னும் 3 நாட்கள் நேரம் உள்ளது. மனப்பாடம் செய்துவிட்டு, ஒப்புவித்தல் போட்டி போன்று முதல்-அமைச்சர் பேசியுள்ளார். அதில் பஞ்ச் டயலாக், சினிமா வசனம் போன்றவைதான் இருந்தன.

முதல்-அமைச்சர் விஜய்யின் உதவியாளர் விஷ்ணு கனமவளங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அந்த ஆதாரத்தை விரைவில் வெளியிடுவேன்.

### “அரசியலுக்கு வந்ததே ஒரு விபத்து”

திமுக ஆட்சியில் வழக்கு இருப்பதை பற்றி முதல்-அமைச்சர் கூறுகிறார். சென்னையில் பட்டப்பகலில் கொலை நடந்துள்ளது. இதற்கெல்லாம் பதில் கூறாமல் 1970-ஆம் ஆண்டுக்குச் சென்றுவிட்டார்.

மிசா குறித்து பேச இவருக்கு தகுதி கிடையாது. சர்க்காரியா கமிஷன் பற்றி இவருக்கு ஏதாவது தெரியுமா? இவர் அரசியலுக்கு வந்ததே ஒரு விபத்து.

அமலாக்கத்துறை கூறியது வெறும் குற்றச்சாட்டுகள் மட்டுமே. அவை இன்னும் நிரூபிக்கப்படவில்லை. சர்க்காரியா கமிஷனுக்குப் பிறகு திமுக 3 முறை ஆட்சிக்கு வந்துள்ளது. அவர்கள் தரப்பு அமைச்சர்கள் மீதும் வழக்குகள் உள்ளன.

நாங்கள் பயந்துவிடுவோம் என்பதற்காக முன்னாள் அமைச்சர் நேரு வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. 6 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற அந்த சோதனையில் அங்கு ஒன்றும் சிக்கவில்லை. மிரட்டல்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம்.”

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
 

தொடர்ந்து படிக்க