உள்ளாட்சி தேர்தல்: மாநகராட்சிகளை கலைக்க தவெக திட்டம்
8 புரட்டாசி 2026 செவ்வாய் 07:27 | பார்வைகள் : 229
தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தாலும், தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தி.மு.க. வலுவான ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.
இதனால், எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வை எதிர்கொண்டு, உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்ற த.வெ.க. தீவிரமாக தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் மார்ச் மாதம் வரை இருந்தாலும், மாநகராட்சிகளை மட்டும் முன்கூட்டியே கலைக்க த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைந்ததும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநகராட்சிகளில் தனி அதிகாரிகளை நியமித்து, அவற்றை த.வெ.க.வின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், அதன்பிறகு 6 மாதங்களுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து த.வெ.க.வை சேர்ந்தவர்கள் கூறுகையில், “மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் தி.மு.க.வினர் நடத்திய ஊழல்களை முன்வைத்து உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்க த.வெ.க. தயாராகி வருகிறது. அதனால்தான், நகராட்சி துறை டெண்டர் முறைகேடு புகார் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது.
இதுகுறித்து முதல்-அமைச்சர் விஜய்யின் கவனத்துக்கு த.வெ.க. மூத்த அமைச்சர்கள் கொண்டு சென்றுள்ளனர். முதல்-அமைச்சர் இறுதி முடிவு எடுப்பார்” என்று தெரிவித்துள்ளனர்.



