ரூ.1.10 லட்சம் கோடி ராணுவ தளவாடங்களுக்கு ஒப்புதல்
8 புரட்டாசி 2026 செவ்வாய் 10:41 | பார்வைகள் : 170
டில்லியில் இன்று, பா.ஜ.க. மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் தலைமையில் ராணுவ தளவாட கொள்முதல் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
இதில், இந்திய முப்படைகளின் போர்த்திறனை வலுப்படுத்தும் வகையில், ரூ.1.10 லட்சம் கோடி மதிப்பில் நவீன ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து ராணுவ அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:
அணுசக்தி பாதிப்புகளை கண்டறியும் வாகனங்கள், தானியங்கி கண்ணிவெடி அமைப்புகள், அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட பல்வேறு தளவாடங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
மேலும், கடற்படை விமான நிலையங்களில் தற்போது பயன்பாட்டில் உள்ள பழைய ரேடார்களுக்கு பதிலாக, ‘ஆருத்ரா’ ரேடார்கள் நிறுவப்பட உள்ளன.
மொத்த கொள்முதலில், ‘சுயசார்பு இந்தியா’ திட்டத்தின் கீழ் 98 சதவீத தளவாடங்கள் உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்தே கொள்முதல் செய்யப்பட உள்ளன.
இவ்வாறு ராணுவ அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.



