புதிய தலைமை செயலகம் சென்னையில் எங்கே அமைகிறது?
8 புரட்டாசி 2026 செவ்வாய் 12:48 | பார்வைகள் : 203
தமிழகத்தின் புதிய தலைமை செயலகம் எங்கு அமைய உள்ளது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சென்னை ஜார்ஜ் கோட்டையில் நிலவும் இடநெருக்கடியை சமாளிக்கும் வகையில், புதிய தலைமை செயலகம் அமைக்க முந்தைய ஆட்சிக் காலத்தில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அந்த முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை.
இந்த நிலையில், “அடுத்த 100 ஆண்டுகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய சட்டசபை மற்றும் தலைமை செயலகம் சென்னையில் 20 லட்சம் சதுரடி பரப்பளவில், ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்” என்று முதல்வர் விஜய் சமீபத்தில் அறிவித்தார்.
இதையடுத்து, புதிய தலைமை செயலகம் எந்த இடத்தில் அமைய உள்ளது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
“புதிய தலைமை செயலகம் கட்ட வேண்டும் என த.வெ.க. அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அதன்படி, ஆட்சிக்கு வந்த ஓரிரு வாரங்களிலேயே அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன.
புதிய தலைமை செயலகம் அமைப்பதற்காக சென்னை கோயம்பேடு பஸ் முனையம், கிண்டி நெடுஞ்சாலைத்துறை வளாகம், நந்தம்பாக்கம் வர்த்தக மையம், பட்டினம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துறை சார்ந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.
இதில், கடலுக்கு அருகேயுள்ள பட்டினம்பாக்கம் பகுதி முதல்வர் விஜய் தரப்புக்கு பிடித்துள்ளது. இந்த இடத்தை முந்தைய முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரும் ஏற்கனவே தேர்வு செய்துள்ளனர்.
பட்டினம்பாக்கம் பகுதி கடலுக்கு அருகில் இருப்பதால், கடல்சார் ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டியுள்ளது.
அதன்படி, கடலுக்கும் தலைமை செயலகத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்துக்கும் இடையே இணைப்பு சாலை உள்ளது. இதனால், கடலோர ஒழுங்குமுறை மண்டலம் நிலை 2-ன் கீழ் அனுமதி கோரப்பட்டுள்ளது.
அதற்கான அனுமதி கிடைத்தவுடன், தலைமை செயலகம் எங்கு அமையப் போகிறது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும். அதேநேரத்தில், தலைமை செயலகம் அமைப்பதற்கான தகுதியான இடங்களையும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.”
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



