வருங்கால சந்ததியினர் மீது நம்பிக்கை: மோகன் பாகவத்

வருங்கால சந்ததியினர் மீது நம்பிக்கை: மோகன் பாகவத்

9 புரட்டாசி 2026 புதன் 05:09 | பார்வைகள் : 177


வருங்கால சந்ததியினர் மீது தனக்கு அதிக நம்பிக்கை இருப்பதாகவும், பாரதம் முன்னேறும்போது எந்த சர்வாதிகாரியையும் உருவாக்காது; போர்களைத் தொடங்காது; மாறாக அமைதியை உருவாக்கும் என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

லண்டனில் நடைபெற்ற கலாசாரம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மோகன் பாகவத் பேசியதாவது:

பன்முகத்தன்மையும் ஒற்றுமையும் இணைந்து செயல்படுவது, உலகளாவிய மோதல்களைத் தீர்க்க உதவும். வருங்கால சந்ததியினர் மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. அவர்கள் உலகை சிறந்த இடமாக மாற்ற விரும்புகிறார்கள். அவர்களுக்கு இலக்கை நிர்ணயித்துக் கொடுத்தால், அதனை அடைவதற்கான வழியை அவர்களே கண்டுபிடிப்பார்கள். பிரிவினைகளைத் தாண்டி நாம் ஒற்றுமையாக வாழ வேண்டும்.

பாரதம் முன்னேறும்போது அது எந்த சர்வாதிகாரியையும் உருவாக்காது; போர்களைத் தொடங்காது; அமைதியை உருவாக்கும். தீவிர வெறுப்புதான் எங்கள் பணியின் அடிப்படை என்று சிலர் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். அது முற்றிலும் நேர்மாறானது.

ஒரு ஹிந்து என்பவர் தனி நபர் மட்டுமல்ல; அவர் குடும்பம், தனது சமூகம், தனது சமுதாயம், மனிதகுலம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியவர். மேலும், நம் அனைவருக்கும் தெரிந்தபடி, ஹிந்துக்கள் இயற்கையை நேசிக்கிறார்கள். குறிப்பாக, அவர்கள் இயற்கையை வழிபடுவது மட்டுமல்லாமல், அதை நேசிக்கவும் செய்கிறார்கள்.

நாம் பகைமை அல்லது போட்டி என்ற எண்ணத்துடன், 'எனக்கு இது வேண்டும்; இது அவனுக்குக் கிடைக்கக் கூடாது. எனக்கு இன்னும் வேண்டும்; அதுவும் அவனுக்குக் கிடைக்கக் கூடாது' என்று சிந்திக்கிறோம். அதற்கு பதிலாக, 'அவனுக்கு இது தேவை, எனக்கு இது தேவை; நம் இருவருக்கும் இது கிடைக்க வேண்டும். எனக்குக் கிடைத்தால், அதில் சிறிதளவு அவனுக்கும் கொடுப்பேன்' என்று சிந்தித்தால், நாம் இயற்கையை வெல்ல வேண்டியதில்லை. நாமே இயற்கையின் ஒரு பகுதிதான்.

வளர்ச்சியானது சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் குலைக்காமல், அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். நமது முன்னேற்றம் இயற்கையின் முன்னேற்றத்துக்கும் வலு சேர்க்க வேண்டும்.

வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏன் ஒன்றுக்கொன்று முரண்பட வேண்டும்? எனவே, 'வாழுங்கள், வாழ விடுங்கள்' என்பது மட்டுமல்ல; 'வாழுங்கள், வாழ விடுங்கள், மற்றவர்களையும் வாழ வையுங்கள்' என்பதே நமது சிந்தனையாக இருக்க வேண்டும். இப்படித்தான் நமது சிந்தனைப் போக்குகள் உருவாகின்றன.

பன்முகத்தன்மை என்பது இயற்கையானது. எனவே, நாம் அதை ஏற்றுக்கொண்டு மதிக்கிறோம்.

இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.
 

தொடர்ந்து படிக்க