முதல்வர் விஜய் ஆதாரமற்ற குற்றச்சாட்டு: உதயநிதி

முதல்வர் விஜய் ஆதாரமற்ற குற்றச்சாட்டு: உதயநிதி

9 புரட்டாசி 2026 புதன் 06:12 | பார்வைகள் : 205


தமிழகத்தில் திமுக ஆட்சி நடப்பதாக நினைத்துக் கொண்டு, எங்கள் மீது அடுக்கடுக்காக ஆதாரமற்ற, பொய்யான குற்றச்சாட்டுகளை முதல்வர் விஜய் சுமத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டசபையில் பேச தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசியதாவது:

கடந்த வியாழக்கிழமை காவல்துறை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சிகளின் சார்பில் பேசிய நான், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தேன். தவெகவின் 116 நாள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்கெட்டுள்ளது என்பதை மிகவும் தெளிவாகவும், விரிவாகவும் ஆதாரங்களுடன் எடுத்துரைத்திருந்தேன்.

### 15 கேள்விகள்

இந்த அரசிடம் 15 கேள்விகளை எழுப்பியிருந்தேன். அவற்றுக்கு முதல்வர் நேரடியாக பதில் அளிக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். இன்று முதல்வர் பதிலுரை வழங்கினார். சுமார் 45 நிமிடங்கள் அவர் பேசினார்.

அதில் முதல் 10 முதல் 15 நிமிடங்கள் ஆன்லைன் முறைகேடு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசினார். அதனை நாங்கள் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தோம். அதன்பிறகு, எந்தவித ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டுகளை எங்கள் மீது சுமத்தத் தொடங்கினார்.

### பொய் குற்றச்சாட்டு

நீங்கள் ஆட்சிக்கு வந்ததை நம்புமாறு ஏற்கனவே வியாழக்கிழமை நான் பேசியபோது தெரிவித்திருந்தேன். ஆனால், மீண்டும் திமுக ஆட்சி நடக்கிறது என்ற நினைப்பில், முதல்வர் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சில கட்சிக் கூட்டங்களில் எங்கள் கட்சி பிரமுகர்கள் பேசியவற்றை சட்டசபையில் எடுத்துக் கூறி, அவற்றையெல்லாம் அவைக் குறிப்பிலும் பதிவு செய்தார்.

இதற்கு நானும், எங்கள் உறுப்பினர்களும் பதிலளிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டோம். ஆனால், சபாநாயகர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை.

தொடர்ந்து, முதல்வர் பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன்வைத்தார். அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பதற்கான வாய்ப்பு எங்களுக்கு மறுக்கப்பட்டது. மீண்டும் வாய்ப்பு வழங்குமாறு கேட்டோம். முதலில் அதற்கு ஒப்புக்கொண்ட சபாநாயகர், பின்னர் வாய்ப்பு வழங்க மறுத்துவிட்டார்.

எங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், முதல்வரின் பேச்சை முழுமையாகக் கேட்டுவிட்டு வெளிநடப்பு செய்தோம்.

### மனப்பாடம்

கடந்த வியாழக்கிழமை இதற்கெல்லாம் திங்கட்கிழமை பதில் சொல்வதாகக் கூறிவிட்டு வேகமாக ஓடிப்போய்விட்டார். அவர் தயார் செய்து கொண்டு வருவார் என்று நாங்களும் எதிர்பார்த்தோம்.

வியாழக்கிழமை ஓட்டப்பந்தயத்தில் ஓடுவது போல் எப்படி ஓடினாரோ, அதேபோல் இன்று மனப்பாடம் செய்துகொண்டு, ஒப்புவித்தல் போட்டி போல சட்டசபையில் தவறான தகவல்களையும், பொய்யான குற்றச்சாட்டுகளையும் ஒப்புவித்துள்ளார்.

### பஞ்ச் டயலாக்

நான் சொன்ன அதே பஞ்ச் டயலாக், அதே சினிமா வசனங்கள், அதே ஆக்டிங் என, ரீல்ஸுக்காக மட்டுமே முதல்வர் இந்தப் பதிலுரையை வழங்கியிருக்கிறார்.

சட்டம் ஒழுங்கு தொடர்பாக நாங்கள் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை. அதற்கு பதிலாக, பிரச்னையை திசை திருப்பும் சூழ்ச்சியே நடந்துள்ளது.

திமுக நிர்வாகிகள் மீது வழக்கு இருந்தால், அதை நடத்துங்கள் என்றுதான் நாங்கள் சொல்கிறோம்.

அவர்களது தவெக கட்சிக்காரர்களே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் பட்டப்பகலில் இரண்டு கொலைகள் நடந்துள்ளன. அது குறித்து பேசுவதற்கு நான் வாய்ப்பு கேட்டேன். அதற்கும் வாய்ப்பு வழங்கவில்லை. இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் 1970-ம் ஆண்டுக்கு போய்விட்டார்.

### தகுதி இருக்கிறதா?

மிசா குறித்து பேச இவருக்கு தகுதி இருக்கிறதா? சர்க்காரியா கமிஷன் குறித்து இவருக்குத் தெரியுமா? யாரோ எழுதிக் கொடுத்ததை மூன்று நாட்களாக மனப்பாடம் செய்துவிட்டு, இங்கு வந்து வாந்தி எடுத்திருக்கிறாரா?

கோடநாட்டில் தனது படத்திற்காக வாட்ச்மேன் வேலை பார்த்துள்ளார். இவர் அரசியலுக்கு வந்ததும், ஆட்சியைப் பிடித்ததும் ஒரு விபத்து.

மூன்று கோப்புகளை ஓபன் பண்ணச் சொன்னார்கள். ஆனால், அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளை மட்டுமே படித்துக் காட்டுகிறார். திமுக தலைவர்களோ, எம்எல்ஏக்களோ, எம்பிக்களோ ஊழல் செய்ததாக யாரும் தண்டிக்கப்படவில்லை.

முதல்வர் மீதே வருமான வரித்துறை வழக்கு உள்ளது. பொதுப்பணித்துறை மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அவர்களது கட்சியில் சேர்த்துக் கொண்டுள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், கு.ப.கிருஷ்ணன் ஆகியோரை வைத்துக்கொண்டு எங்களைப் பற்றி பேச இவருக்கு என்ன தகுதி இருக்கிறது?

பெட்டி பெட்டியாக பணத்துடன் வந்து ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டதாக நேற்று முஸ்லிம் லீக் எம்எல்ஏ வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

### குதிரை பேரம்

வெளிப்படையாகவே குதிரை பேரத்தில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது. நேற்று முன்தினம் எங்களை மிரட்டுவதற்காக கே.என்.நேரு வீட்டில் ரெய்டு நடத்தினார்கள். சட்டப்படி அனைத்தையும் சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

முதல்வர் அலுவலகத்தில் ஆலோசகர்களாக உள்ள விஷ்ணு ரெட்டி, சுஜய் ரெட்டி, அனில் ரெட்டி ஆகியோர்தான் அரசு நடத்தக்கூடிய கனிம வளங்களை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இது தொடர்பான ஆதாரங்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடுவேன்.

### வக்கற்ற அரசு

நாங்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல முடியாத வக்கற்ற அரசு தற்போது அமைந்துள்ளது. முழுக்க முழுக்க சினிமா சூட்டிங்கிற்கு என்ன தேவையோ, அதை மூன்று நாட்களில் மனப்பாடம் செய்துவிட்டு வந்து இங்கு பேசியுள்ளார்.

ஒருதலைபட்சமாக நடந்துகொள்ளக்கூடிய சபாநாயகருக்கு எங்களது கண்டனத்தைப் பதிவு செய்து கொள்கிறோம்.

இவ்வாறு உதயநிதி கூறினார்.
 

தொடர்ந்து படிக்க