21 நாள் சட்டசபை கூட்டத்தொடர் நிறைவு: 11 மசோதாக்கள் நிறைவேற்றம்
9 புரட்டாசி 2026 புதன் 07:17 | பார்வைகள் : 192
21 நாட்களாக நடைபெற்ற தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இந்தக் கூட்டத்தொடரில் மொத்தம் 11 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
பட்ஜெட் தாக்கல்
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாளான ஆகஸ்டு 6-ந் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து, 7, 10, 11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. ஆகஸ்டு 12-ந் தேதி நிதி அமைச்சர் மரியவில்சன் மற்றும் வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோர் பதிலுரை வழங்கினர்.
மானியக் கோரிக்கை விவாதம்
இதையடுத்து, ஆகஸ்டு 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. தமிழகத்தில் மொத்தம் 55 துறைகள் இருப்பதால், தினமும் 3 முதல் 4 துறைகள் வீதம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
முக்கியமாக, கடந்த 3-ந் தேதி முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் கைவசம் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதால், சட்டசபையில் பரபரப்பான சூழல் நிலவியது.
11 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்
இந்த நிலையில், நேற்று முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரத்துடன் பதில் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், சட்டசபையில் இன்று 11 சட்ட மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, கடந்த 21 நாட்களாக நடைபெற்று வந்த சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைந்தது.
இதையடுத்து, பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஒத்திவைத்தார்.
அடுத்ததாக, நவம்பர் மாதத்தில் மழைக்கால கூட்டத்தொடர் சுமார் 3 நாட்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் என தெரிகிறது.



