முதல்-அமைச்சர் விஜய் மீது தி.மு.க. உரிமை மீறல் புகார்
9 புரட்டாசி 2026 புதன் 08:20 | பார்வைகள் : 215
சட்டப்பேரவையில் விதிகளை மீறி பேசியதாக முதல்-அமைச்சர் விஜய் மீது தி.மு.க. துணைக் கொறடா கோவி. செழியன், சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளித்துள்ளார்.
முதல்-அமைச்சர் விஜய்
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த முதல்-அமைச்சர் விஜய், தி.மு.க. மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
இதையடுத்து, இன்றைய பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய தி.மு.க. கொறடா எ.வ.வேலு கூறியதாவது:
“என்னுடைய சட்டமன்ற அனுபவத்தில் எத்தனையோ முதல்-அமைச்சர்களை பார்த்துள்ளேன். அவர்கள் அனைவரும் கண்ணியமாகத்தான் பேசினார்கள். நேற்று 26 நிமிடங்கள் அமைதியாக காத்திருந்தோம். ஆனால், நீதிமன்ற விசாரணையில் இருக்கும் வழக்குகள் குறித்து முதல்-அமைச்சர் பேசியிருக்கிறார்.
பலமுறை இதே மன்றத்தில் பேசப்பட்ட சர்க்காரியா அறிக்கை குறித்தும் அவதூறாக பேசியிருக்கிறார். முதல்-அமைச்சர் ஆதாரமில்லாமல் பேசியிருக்கிறார். காவல்துறை மானியம் தொடர்பான தகவல்களைத் தவிர்த்து, மிசா, மாறன் குறித்த பேச்சுகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்றார்.
நீக்க முடியாது - சபாநாயகர் திட்டவட்டம்
எனினும், முதல்-அமைச்சர் விஜய் பேசியதில் இருந்து எந்தப் பகுதியையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் அவையின் மையப்பகுதிக்கு வந்து, சபாநாயகர் முன்பு முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், சட்டப்பேரவைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடும் தி.மு.க.வினரை அவையில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
தி.மு.க.வினர் வெளியேற்றம்
இந்தச் சூழலில், தி.மு.க.வினர் தங்களது இருக்கைகளுக்குச் சென்று அமருமாறு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார். ஆனால், தி.மு.க.வினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவர்களை அவையில் இருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, தி.மு.க.வினரை காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.
உரிமை மீறல் புகார்
இந்த நிலையில், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை அவரது அறையில் சந்தித்த தி.மு.க. துணைக் கொறடா கோவி. செழியன் மற்றும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், முதல்-அமைச்சர் விஜய் மீது உரிமை மீறல் புகார் அளித்துள்ளனர்.
அவர்கள் அளித்த புகாரில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் நேற்று காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய பதிலுரையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் குறித்து பேசியது, அவையில் இல்லாத முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் முரசொலி மாறன் குறித்து பேசியது, நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து பேசியது ஆகியவை சட்டப்பேரவை விதிகளுக்கு எதிரானவை என தெரிவித்துள்ளனர்.
எனவே, தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



