Bondy நகரில் ஜவல் கலந்த தண்ணீர் வாளியில் மூழ்கி 11 மாதக் குழந்தை உயிரிழப்பு!!

Bondy நகரில் ஜவல் கலந்த தண்ணீர் வாளியில் மூழ்கி 11 மாதக் குழந்தை உயிரிழப்பு!!

8 புரட்டாசி 2026 செவ்வாய் 22:25 | பார்வைகள் : 2099


Bondy நகரில் 11 மாதக் குழந்தை ஒன்று வீட்டுக்குள் இருந்த ஜவல் கலந்த தண்ணீர் வாளியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி திங்கட்கிழமை மதியம் 12.20 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குழந்தை வசித்து வந்த Résidence des Cèdres குடியிருப்பில் உள்ள வீட்டின் சமையலறையில், ஜவல் கலந்த தண்ணீர் இருந்த வாளியில் குழந்தை தலைகீழாக மூழ்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

குழந்தையின் பெற்றோர் வீட்டின் மற்றொரு அறையில் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்ததாகவும், குழந்தையின் சத்தம் கேட்காததால் தேடியபோது,  அசைவின்றி வாளிக்குள் இருந்ததை கண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் அதிர்ச்சியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி குடியிருப்பாளர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

குழந்தைகள் தண்ணீரில் மூழ்குவதற்கு அதிக நேரம் தேவையில்லை என்றும், சில நிமிடங்களே போதுமானது என்றும் குழந்தை நல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குளியல் தொட்டி மட்டுமல்லாமல், வாளி போன்ற சாதாரண வீட்டு பொருட்களிலும் குழந்தைகள் விபத்துக்குள்ளாகலாம் என்பதால், சிறு குழந்தைகளை தண்ணீர் அருகில் ஒரு கணம் கூட தனியாக விடக்கூடாது என்பதே முக்கிய எச்சரிக்கையாகும். 

தொடர்ந்து படிக்க