"சீருடைக்கே அவமானம்” – Carcassonne நகர காவல்துறை அதிகாரிகள் மீது விசாரணைக்கு உத்தரவு!!
9 புரட்டாசி 2026 புதன் 19:59 | பார்வைகள் : 1550
உள்துறை அமைச்சர் Laurent Nuñez, Carcassonne நகர மாநகர காவல்துறை பிரிவில் நிர்வாக ரீதியான கட்டுப்பாட்டு விசாரணை ஒன்றை நடத்த உத்தரவிட்டுள்ளார். மாநகர காவல்துறையினர் சிலர் இனவெறி, ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துக்களை தெரிவித்ததாக வெளியாகிய காணொளியைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக்கள் “காவல்துறை சீருடைக்கும் குடியரசின் மதிப்புகளுக்கும் அவமானமானவை” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதம் 2025ஆம் ஆண்டு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் இந்தக் காணொளி தற்செயலாகப் பதிவாகியிருந்தது. பின்னர் Midi Libre வெளியிட்ட காணொளியில், வட ஆபிரிக்க வம்சாவளியினர் உள்ளிட்ட சில சமூகத்தினரை இழிவுபடுத்தும் இனவெறிக் கருத்துக்களும், பெண்கள் மற்றும் பிற சமூகத்தினரை அவமதிக்கும் வார்த்தைகளும் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து Carcassonne அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக Carcassonne நகர மேயர் Christophe Barthès அந்தக் கருத்துக்களை “அருவருக்கத்தக்கவை மற்றும் மன்னிக்க முடியாதவை” எனக் கண்டித்ததுடன், சம்பந்தப்பட்ட அனைவரும் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். இதற்கிடையில், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளில் ஒருவருக்கு Rassemblement national (RN) கட்சியுடன் தொடர்பு இருந்ததாகவும், கடந்த பெப்ரவரியில் Carcassonne நகருக்கு Jordan Bardella சென்றபோது அவரது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்தக் காணொளி விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, அவரை கட்சியிலிருந்தும் அதன் பாதுகாப்புப் பிரிவிலிருந்தும் உடனடியாக நீக்கியதாக RN அறிவித்துள்ளது.



