2 தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!
10 புரட்டாசி 2026 வியாழன் 05:14 | பார்வைகள் : 219
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கான தி.மு.க. வேட்பாளர்களை அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார். மதுராந்தகம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ.,வும் தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலருமான வழக்கறிஞர் ஐ.பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் வழக்கறிஞர் எஸ்.சுகன்யாவும் போட்டியிடுகின்றனர்.
ஆளும் கட்சியான த.வெ.க.,வுக்கு இடைத்தேர்தலில் ஆதரவு அளிப்பது தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பமான சூழல் நிலவி வருகிறது.
தமிழகத்தில் ஏழு சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் தேர்தல் வழக்கு இல்லாத மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் கமிஷன் இடைத்தேர்தலை அறிவித்துள்ளது.
இத்தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருப்பதால், தி.மு.க. சார்பில் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் நேற்று அறிவிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெற உள்ள மதுராந்தகம் தனி தொகுதி இடைத்தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலரும் வழக்கறிஞருமான ஐ.பரந்தாமன் போட்டியிடுவார் என்றும், தாராபுரம் தனி தொகுதியில் வழக்கறிஞர் எஸ்.சுகன்யா போட்டியிடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
**ஆலோசனை**
நேற்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, பொதுச்செயலர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலர் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் மாவட்டச் செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையை முடித்த பிறகு கட்சி தலைமை அலுவலகமான அறிவாலயத்திற்கு சென்ற அவர், அங்கு மீண்டும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தார். இதையடுத்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.
மதுராந்தகம் வேட்பாளர் பரந்தாமன், தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலராக உள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ.,வான அவருக்கு கடந்த சட்டசபை தேர்தலில் எழும்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்போது இடைத்தேர்தல் வேட்பாளராக பரந்தாமன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
**பரந்தாமன் பேட்டி**
த.வெ.க. ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துக்கூறி வெற்றி பெறுவேன். த.வெ.க. அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தி.மு.க. ஆட்சியில் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தோம் என்பதை மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்றடையவில்லை. விலைவாசி அதிகரித்துள்ளது. மின் கட்டணமும் அதிகமாக உயர்ந்துள்ளது. முதியோர் உதவித்தொகை பலருக்கு கிடைக்கவில்லை. விதவையர் உதவித்தொகையும் பலருக்கு கிடைக்கவில்லை.
இதுபோன்ற எண்ணற்ற பிரச்னைகள் உள்ளன. அவற்றை வீடு வீடாகச் சென்று மக்களிடம் எடுத்துக்கூறி வெற்றி பெறுவோம். அக்டோபர் முதல் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகள் தி.மு.க. தொகுதிகளாக மாறும் என்று அவர் கூறினார்.
**குழப்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள்**
இடைத்தேர்தலில் த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள் குழப்பமான நிலையில் உள்ளன.
இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
த.வெ.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கான குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுப்பது மற்றும் இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பது தொடர்பாக இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட்டு ஆலோசனை நடத்தி வருகின்றன.
குறைந்தபட்ச செயல்திட்டத்தை த.வெ.க. ஏற்றுக்கொள்ளும் வரை கூட்டணியில் சேரப்போவதில்லை என்று ஆளும் கட்சி மேலிடத்திடம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இடைத்தேர்தலில் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று த.வெ.க. கேட்டுக் கொண்டுள்ளது.
அ.தி.மு.க.வில் இருந்து எம்.எல்.ஏ., பதவிகளை ராஜினாமா செய்து வருபவர்களை த.வெ.க.வில் சேர்க்கக்கூடாது என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதுகுறித்து அமைச்சர்கள் வாயிலாக முதல்வரிடமும் தெரிவித்திருந்தோம். ஆனால், அதை அவர் காது கொடுத்து கேட்கவில்லை.
இந்நிலையில், ராஜினாமா காரணமாக ஏற்பட்ட இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்கக்கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநில குழு உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.
ஆனால், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசிய குழு உறுப்பினர்களில் பலரும், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சிலரும், த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இல்லையெனில் தி.மு.க.வுக்கு மறைமுக ஆதரவு அளித்தது போலாகிவிடும் என்று கூறுகின்றனர்.
அவ்வாறு இல்லாவிட்டால், தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிக்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். கட்சிக்குள் இவ்வாறு கருத்து வேறுபாடு நிலவுவதால், குழப்பமான சூழல் நீடித்து வருகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
**தாராபுரம் வேட்பாளர் சுகன்யா - பயோடேட்டா**
பெயர்: சுகன்யா
வயது: 34
படிப்பு: எம்.ஏ., - பி.எல்.,
தொழில்: வழக்கறிஞர்
கட்சி பதவி: திருப்பூர் கிழக்கு மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர்
கணவர்: மணிவாசகம்
கணவரின் கட்சி பதவி: மேற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்
மகள்: அக்ஷயா, 6 வயது
**மதுராந்தகம் வேட்பாளர் பரந்தாமன் - பயோடேட்டா**
பெயர்: ஐ.பரந்தாமன்
வயது: 49
பிறந்த ஊர்: பூந்தமல்லி, திருவள்ளூர் மாவட்டம்
மனைவி: பிரேமா
படிப்பு: பி.ஏ., - பி.எல்.,
தொழில்: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்
கட்சி பொறுப்பு: தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலர்
கடந்த 2021ல் எழும்பூர் தொகுதியில் வெற்றி



