தேசிய நெடுஞ்சாலைகளில் மரங்கள் நடுவது கட்டாயம்!

தேசிய நெடுஞ்சாலைகளில் மரங்கள் நடுவது கட்டாயம்!

10 புரட்டாசி 2026 வியாழன் 06:26 | பார்வைகள் : 211


புதிதாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையை பயன்பாட்டுக்கு திறப்பதற்கு முன்பாக, அப்பகுதியில் போதுமான பசுமை இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். இதற்காக, பசுமை மண்டலத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 80 சதவீத இடத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டிருக்க வேண்டும். மேலும், ஆய்வின்போது நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் குறைந்தபட்சம் 90 சதவீத பிழைப்பு விகிதத்துடன் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, டில்லியில் செயல்படும் 'நஹாய்' எனப்படும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளதாவது:

புதிதாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையின் பணிகள் முழுமையாக முடிவடைந்த பின்னர், அந்தச் சாலை வணிக ரீதியான பயன்பாட்டுக்கு பாதுகாப்பானது என சான்றளிக்கப்படுவதற்கு முன், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மரக்கன்றுகள் நடும் பணிகள் கணிசமான அளவுக்கு நிறைவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அதன்படி, நெடுஞ்சாலையின் பசுமை மண்டலத்திற்காக ஒதுக்கப்பட்ட பாதையில் குறைந்தபட்சம் 80 சதவீத நிலப்பரப்பில் மரக்கன்றுகள் நடப்பட்டிருக்க வேண்டும். அதேபோல், ஆய்வு மேற்கொள்ளப்படும் நேரத்தில், நடப்பட்ட மரக்கன்றுகளில் குறைந்தபட்சம் 90 சதவீதம் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

மீதமுள்ள மரக்கன்றுகளை நடவு செய்து, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை முழுமையாக எட்டும் வரை, ஒப்பந்தத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைக்கும் நடவடிக்கையும் தொடரும்.

மேலும், பட்டுப்போகும் மரக்கன்றுகளுக்கு பதிலாக, அதே வயது மற்றும் வளர்ச்சி நிலையில் உள்ள செடிகளை நட்டு, பசுமையின் சீரான தன்மையை தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்றும் வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டபோது, சாலையின் நடுப்பகுதி மற்றும் இருபுறங்களிலும் மரக்கன்றுகளை வளர்ப்பது ஒப்பந்த விதிகளின்படி கட்டாயமாக இருந்தபோதிலும், அதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாகவே புதிய வழிகாட்டுதல்களை வெளியிடும் முடிவு எடுக்கப்பட்டதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தொடர்ந்து படிக்க