மும்மொழி கொள்கை: 6ம் வகுப்புக்கு விலக்கு அளிக்க சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

மும்மொழி கொள்கை: 6ம் வகுப்புக்கு விலக்கு அளிக்க சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

10 புரட்டாசி 2026 வியாழன் 07:32 | பார்வைகள் : 176


மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதில் இருந்து நடப்பு கல்வியாண்டில் 6ம் வகுப்புக்கு விலக்கு அளிப்பது குறித்து சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் பரிசீலிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தேசிய கல்விக் கொள்கை - 2020 அடிப்படையில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் மற்றும் கல்வி நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை அறிவித்தது. அதன்படி, 6ம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை கட்டாயமாக்கப்பட்டது. இந்த புதிய நடைமுறை கடந்த ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நடைமுறையின்படி, மாணவர்கள் மூன்று மொழிகளை கற்க வேண்டும். இதில் இரண்டு மொழிகள் கட்டாயம். அந்த இரு மொழிகளும் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும். மூன்றாவது மொழி மட்டும் வெளிநாட்டு மொழியாக இருக்கலாம். இதில் ஆங்கிலம் வெளிநாட்டு மொழியாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கொள்கையை கட்டாயமாக்கியதை எதிர்த்து மாணவர், பெற்றோர் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

**நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:**

நடப்பு கல்வியாண்டில் 6ம் வகுப்புக்கு மும்மொழி கொள்கையில் இருந்து விலக்கு அல்லது சலுகை வழங்குவது குறித்து சி.பி.எஸ்.இ., பரிசீலிக்க வேண்டும். அடுத்த கல்வியாண்டு முதல் கூட 6ம் வகுப்பில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தலாம்.

மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் கூடுதல் சுமையை அளிக்கக்கூடாது. புதிய மொழிகளை கற்பிப்பதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

வழக்கு விசாரணையின்போது, 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களை வரையறுக்கும் அதிகாரம் என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கே உள்ளது என்றும், சி.பி.எஸ்.இ.,க்கு அந்த அதிகாரம் இல்லை என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
 

தொடர்ந்து படிக்க