மிசாவில் ஸ்டாலின் பெயர் சாட்சியாக மட்டுமே உள்ளது; அமைச்சர் நிர்மல் குமார்

மிசாவில் ஸ்டாலின் பெயர் சாட்சியாக மட்டுமே உள்ளது; அமைச்சர் நிர்மல் குமார்

10 புரட்டாசி 2026 வியாழன் 08:34 | பார்வைகள் : 208


கடந்த தி.மு.க. ஆட்சியை பத்து 'பவர் புரோக்கர்கள்' தான் நடத்தினர் என்று த.வெ.க. அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் இ.கம்யூ., தேசிய பொதுச்செயலர் ராஜா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை, அமைச்சர்கள் அருண்ராஜ், நிர்மல்குமார் மற்றும் இ.கம்யூ., தமிழக செயலர் வீரபாண்டியன் உள்ளிட்டோர் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

பின்னர் அமைச்சர் நிர்மல்குமார் அளித்த பேட்டி:

கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. அரசு ஐந்து ஆண்டுகள் நீடிக்கும். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் 'மிசா'வில் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் உள்ளன. 'மிசா'வில் தாக்கப்பட்டவர்களில் கூட, ஸ்டாலின் பெயர் சாட்சியாகவே இடம்பெற்றுள்ளது. சிட்டிபாபு மரணம் தொடர்பான விவகாரத்திலும், ஸ்டாலின் பெயர் ஒரு சாட்சியாகவே உள்ளது.

தி.மு.க. செய்த தவறுகள் மற்றும் துரோகங்களில் இருந்து தமிழகத்தை மாற்றி வருகிறோம் என்பதை மக்களிடம் சொல்லியே ஆக வேண்டும். மூன்று தலைமுறைகளாக எதை கூறி மக்களை ஏமாற்றினர் என்பதை தற்போதைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்வது அவசியம்.

கடந்த தி.மு.க. ஆட்சியில் 'டாஸ்மாக்' நிர்வாகத்தை நடத்திய ரத்தீஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்டாலினின் மாப்பிள்ளை மற்றும் மகனுடன் இருந்த 10 பேருடன் சேர்ந்து, 'டாஸ்மாக்' நிர்வாகத்தை ரத்தீஷ் என்ற தனிநபர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அதனால்தான் சட்டசபையில் அவரது பெயரை முதல்வர் குறிப்பிட்டார்.

ரத்தீஷ் போன்ற 'பவர் புரோக்கர்களை' பயன்படுத்தியே தி.மு.க. அரசு நடத்தப்பட்டுள்ளது. அப்போது துணை முதல்வராக இருந்த உதயநிதியுடன் ரத்தீஷ் 24 மணி நேரமும் இருந்தவர். தற்போது அவருக்கு எதிராக தேடுதல் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம் தொகுதி தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பரந்தாமனுக்கு, தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது 'சீட்' வழங்கப்படவில்லை. கட்சியின் தலைமை அலுவலகத்திற்குள்ளும் அவரை அனுமதிக்கவில்லை. தற்போது அவரை இடைத்தேர்தலில் வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். அவரது நிலைமை பரிதாபமாக உள்ளது.

இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.
 

தொடர்ந்து படிக்க