டாஸ்மாக் முறைகேடு: சாட்சியங்கள் திரட்டல்
10 புரட்டாசி 2026 வியாழன் 09:36 | பார்வைகள் : 195
டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில், மாவட்ட மேலாளர்களுடன் அமைச்சர் விக்னேஷ் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அதன்பின் அவர் அளித்த பேட்டி:
கடந்த காலங்களில் மது பாட்டிலுக்கு கூடுதலாக 5 ரூபாய் வசூலித்தவர்களை, 10 ரூபாய் வசூலிக்கச் சொன்னவர்கள் தி.மு.க.வினர்தான்.
அவர்களால் கண்துடைப்புக்காக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட சிலர் தற்போது மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த மாதம் 1ம் தேதி முதல், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுவிற்பனை செய்யும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஒரு மாவட்டத்தில் அதிக அளவில் முறைகேடுகள் நடைபெறுவதாக தெரியவந்தால், அதற்கு காரணமான பணியாளர்கள் மீது மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
என் பெயரை பயன்படுத்தி கடைகளில் பணம் வசூலிப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இதுவரை மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
த.வெ.க.வினராக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி, தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் மீது புகார் வந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
மது வகைகள் கொள்முதல் செய்யப்படும் 11 நிறுவனங்களும் சமமாகவே பார்க்கப்படுகின்றன.
**நடவடிக்கை எடுக்கப்படும்**
கடந்த ஆட்சியில் டாஸ்மாக் மீது அமலாக்கத்துறை என்னென்ன குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதோ, அவை அனைத்தையும் முதல்வர் விஜய் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
இவற்றையெல்லாம் தெரிவிப்பது எதற்காக என்றால், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதற்கான சாட்சியங்கள் தற்போது திரட்டப்பட்டு வருகின்றன. நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் விக்னேஷ் கூறினார்.



