புதிய கதவணை: காவிரி நீரை தேக்க சிக்கல்

புதிய கதவணை: காவிரி நீரை தேக்க சிக்கல்

10 புரட்டாசி 2026 வியாழன் 10:39 | பார்வைகள் : 179


மத்திய அரசின் அனுமதி பெறாமல் தமிழக நீர்வளத்துறை கட்டியுள்ள புதிய கதவணையில் காவிரி நீரை தேக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்யும் காலங்களில், தமிழகத்திற்கு அதிகளவில் காவிரி நீர் வருகிறது.

அந்த காலகட்டங்களில் காவிரி நீரை சேமித்து வைக்கும் அளவுக்கு கதவணைகள் மற்றும் தடுப்பணைகள் போதுமான அளவில் இல்லை. மேட்டூர், முக்கொம்பு, கல்லணை ஆகிய இடங்களில் மட்டுமே தண்ணீரை தேக்கி வைக்க முடிகிறது.

இதன் காரணமாக பெரும்பகுதி காவிரி நீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண கொள்ளிடம் ஆற்றில் கதவணைகள் அமைக்க வேண்டும் என டெல்டா விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தினர்.

இதையடுத்து, அ.தி.மு.க. ஆட்சியில் கடலூர் மாவட்டம் ஆதனூர் - மயிலாடுதுறை மாவட்டம் குமாரமங்கலம் இடையே கதவணை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. கட்டுமானப் பணிகளுக்காக ரூ.516 கோடி ஒதுக்கப்பட்டு, 2020ம் ஆண்டு பணிகள் தொடங்கின.

கடந்த தி.மு.க. ஆட்சியிலும் பணிகள் தொடர்ந்து நடைபெற்ற நிலையில், கடந்த ஜனவரி மாதம் பணிகள் முழுமையாக நிறைவடைந்தன. இத்திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடாக ரூ.52 கோடி செலவிடப்பட்டுள்ளது.

பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்ட நிலையில், மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை பெறாமல் கதவணை கட்டப்பட்டுள்ளதால், அதில் தண்ணீரை தேக்குவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் டெல்டா விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

**நீர்வளத்துறை அதிகாரி விளக்கம்**

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அ.தி.மு.க. ஆட்சியில் மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் பணிகள் தொடங்கப்பட்டன. அதன்பின்னர் தி.மு.க. ஆட்சியில், 2024 டிசம்பர் மாதத்தில்தான் மத்திய அரசின் பரிவேஷ் இணையதளம் வாயிலாக சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம் செய்யப்பட்டது.

பணிகள் தொடங்கிய பிறகு சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டதால், இதுவரை மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் புதிய கதவணையில் தண்ணீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
 

தொடர்ந்து படிக்க