ஊழியர்கள் வேலை நிறுத்தம்; 4 நாட்கள் வங்கிகள் இயங்காது
10 புரட்டாசி 2026 வியாழன் 11:42 | பார்வைகள் : 193
வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, நான்கு நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
வங்கி ஊழியர்களுக்கு வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்க வேண்டும், சாதாரண ஊழியர்களிடம் காட்டப்படும் பாரபட்சமான நடவடிக்கைகளை மாற்ற வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர் சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் நாளை ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள் கிழமை விநாயகர் சதுர்த்தி என தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
**அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்க தமிழக பொதுச்செயலர் ரோஷன் கார்க்கி கூறியதாவது:**
வங்கி ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் உயர் அதிகாரிகளுக்கும் சாதாரண ஊழியர்களுக்கும் இடையே காட்டப்படும் பாரபட்சமான நடவடிக்கைகளை கண்டித்தும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் இரண்டு கட்ட வேலைநிறுத்தப் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, நாளை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டமும், வரும் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை மூன்று நாட்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டமும் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.



