தவெகவை அ.தி.மு.க. பொதுச்செயலர் கடும் விமர்சனம்
10 புரட்டாசி 2026 வியாழன் 12:45 | பார்வைகள் : 186
வாய்ப்பந்தல் போடுவதை நிறுத்திவிட்டு, விவசாயிகளிடம் இருந்து நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
**அவரது அறிக்கை:**
ஏமாற்றிப் பிழைக்கும் தொழிலை கச்சிதமாக செய்து வரும் முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. கூட்டணி அரசு, 'சொல் ஒன்று, செயல் வேறு' என்ற வகையில் மக்களை வஞ்சித்து வருகிறது.
உரிய நேரத்தில் காவிரியில் தண்ணீர் திறந்து விடாமல் விவசாயிகளை சிரமத்திற்கு உள்ளாக்கிய த.வெ.க. அரசு, தற்போது பயிர்க்கடன் விவகாரத்திலும் அவர்களை ஏமாற்றியுள்ளது.
தறிகெட்டு ஓடும் குதிரையைப் போல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கும் இந்த அரசுக்கு, சொல் புத்தியும் இல்லை; சுய புத்தியும் இல்லை.
காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை, உரிய காலத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கொள்முதல் செய்யவில்லை.
இதன் காரணமாக, நெல் முளைவிட்டு வீணாகி வருகிறது. 'வானத்தை வில்லாய் வளைப்போம், விண்மீன்களை பூமிக்கு கொண்டு வந்து வெளிச்சம் தருவோம்' என வாய்ப்பந்தல் போடுவதை கைவிட்டு, நெல்மணிகள் வீணாவதைத் தடுக்க உடனடியாக முழுமையாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



