சிறையில் அடி வாங்கிய தழும்பு இருக்கிறது; தாடை உடைந்தது: ஸ்டாலின்

சிறையில் அடி வாங்கிய தழும்பு இருக்கிறது; தாடை உடைந்தது: ஸ்டாலின்

10 புரட்டாசி 2026 வியாழன் 13:49 | பார்வைகள் : 243


மிசா காலத்தில் சிறையில் இருந்தபோது தனக்கு பல்வேறு கொடுமைகள் நடந்ததாகவும், சிறையில் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட தழும்புகள் இன்றளவும் இருப்பதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

**இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:**

சட்டசபையில் நடைபெற்ற சர்ச்சைகள் தமிழ் மக்களுக்கும், நமது உடன்பிறப்புகளுக்கும் கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியதை உணர்கிறேன். இந்த விவகாரத்தில் எனது சிறை வரலாறு தொடர்புடையதாக இருப்பதால், அது குறித்து தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

சிறையில் எங்களுக்கு பல கொடுமைகள் இழைக்கப்பட்டன. தொழுநோயாளிகள் அடைக்கப்பட்டிருந்த அறையிலேயே எங்களையும் அடைத்தனர். 10 பேரை ஒரு சிறிய அறைக்குள் அடைத்து வைத்தனர். அனைவரும் அதே அறையில்தான் சிறுநீர் கழிக்க வேண்டும். அறை முழுவதும் துர்நாற்றமாக இருக்கும். அந்த இடத்திலேயே நாங்கள் தூங்க வேண்டியிருந்தது.

இரவு நேரங்களில் கூட தூங்க விடாமல் போலீசார் லத்தியால் அடிப்பார்கள்; பூட்ஸ் காலால் மிதிப்பார்கள். மேலும், ஆயுள் தண்டனைக் கைதிகளை வைத்து எங்களை தாக்கச் செய்வார்கள். அவர்கள் நடத்திய தாக்குதலில் எனது அண்ணன் எம்.பி. சிட்டிபாபு சிறையிலேயே உயிரிழந்தார்.

**தாடை உடைந்தது**

அவர்கள் தாக்கியதில் எனது தாடை உடைந்தது. நீங்கள் கை வைத்து தாடையை சுட்டிக்காட்டியது சரிதான். இன்றும் நான் தாக்கப்பட்டதற்கான தழும்புகள் உள்ளன. எனது தாடை உடைந்தது. யார் என்னை கொச்சைப்படுத்த முயன்றாலும், வரலாற்றை மாற்ற முடியாது.

முதல்வர் விஜய் சட்டசபையில் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். ஆட்சி நிர்வாகத்தை சினிமா ஷூட்டிங் போல நடத்துகிறீர்கள். எனது வரலாறு குறித்து சட்டசபை நூலகத்திற்குச் சென்று முதல்வர் விஜய் படித்துப் பார்க்கட்டும்.

சர்காரியா கமிஷன் மற்றும் கருணாநிதி தொடர்பாக முதல்வர் விஜய் தவறான தகவல்களை தெரிவித்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் கூறிய பொய்யான குற்றச்சாட்டுகளையும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியினருக்கும் அமலாக்கத்துறை வழக்குகள் உள்ளன. முதல்வராக பொறுப்பேற்ற பிறகு என்னை வீட்டிற்கு வந்து சந்தித்தபோது, பிரசாரத்தின்போது உங்களை அதிகமாக விமர்சித்துவிட்டேன் என்று மன்னிப்பு கேட்டதை மறந்துவிட்டீர்களா? அதை நான் மனதில் வைத்துக் கொள்ளவில்லை.

**சண்டை செய்வோம்**

அப்போதும் யாரைப் பற்றி பேசினாலும் கண்ணியத்துடன் பேச வேண்டும் என்று உங்களுக்கு ஆலோசனை வழங்கினேன். ஆனால், அதை நீங்கள் மறந்துவிட்டீர்கள் போல தெரிகிறது.

ஆட்சி நிர்வாகத்தை சினிமா ஷூட்டிங் போல நடத்துகிறீர்கள். தினந்தோறும் திருட்டு, கொலை, கொள்ளை என சட்டம்-ஒழுங்கு படுகுழியில் கிடக்கிறது.

கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல் அந்தர் பல்டி அடித்துள்ளீர்கள். எது நிர்வாகத் திறன் கொண்ட அரசு, எது நிர்வாகத் திறன் இல்லாத அரசு என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக சண்டை செய்வோம்.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

தொடர்ந்து படிக்க