ஐரோப்பிய விண்வெளித் துறையை வலுப்படுத்த 20 பில்லியன் யூரோக்கள் முதலீடு!!

ஐரோப்பிய விண்வெளித் துறையை வலுப்படுத்த 20 பில்லியன் யூரோக்கள் முதலீடு!!

10 புரட்டாசி 2026 வியாழன் 07:04 | பார்வைகள் : 851


ஐரோப்பிய விண்வெளித் துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில், சர்வதேச விண்வெளி உச்சி மாநாட்டில் 51 நிதி ஒப்பந்தங்கள் மற்றும் முதலீட்டு அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். பரிசில் உள்ள Grand Palais-ல் செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற முதலாவது சர்வதேச விண்வெளி உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட அவர், இந்த ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு சுமார் 20 பில்லியன் யூரோக்கள் எனக் குறிப்பிட்டார்.

இந்த 20 பில்லியன் யூரோக்களில் சுமார் நான்கில் ஒரு பங்கு நேரடி ஒப்பந்தங்கள் மற்றும் முதலீடுகளாகும். மீதமுள்ள 15.7 பில்லியன் யூரோக்கள் எதிர்கால ஐரோப்பிய செயற்கைக்கோள் வலையமைப்பான IRIS² திட்டத்துடன் தொடர்புடையது. நெருக்கடி காலங்களில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு பாதுகாப்பான தகவல் தொடர்பு வசதிகளை வழங்கும் வகையில் இந்த செயற்கைக்கோள் கூட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளது.

இதற்கிடையில், Amazon Leo மற்றும் Arianespace ஆகிய நிறுவனங்கள் மேலும் ஆறு செயற்கைக்கோள் ஏவுதல்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் Amazon Leo செயற்கைக்கோள்களுக்காக திட்டமிடப்பட்ட மொத்த ஏவுதல்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

பாதுகாப்பு, உளவுத்துறை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் அவசரநிலை மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்தப்படும் இந்த செயற்கைக்கோள்கள், ஐரோப்பாவுக்கான சுயாதீன விண்வெளி அணுகலை வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படிக்க