ஜனநாயகப் புரட்சியை நிகழ்த்திய விசில் சின்னம்: முதல்-அமைச்சர் விஜய்
11 புரட்டாசி 2026 வெள்ளி 05:14 | பார்வைகள் : 252
தமிழக வெற்றிக் கழகத்தை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், அக்கட்சிக்கு ‘விசில்’ சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைவருக்கும் நன்றி தெரிவித்து முதல்-அமைச்சரும், த.வெ.க. தலைவருமான விஜய் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
**அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:**
என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அளவற்ற அன்பை வழங்கி, வாழ்வில் கிடைத்தற்கரிய உயரிய இடத்தை பேரன்புடன் எனக்கு அளித்துள்ளீர்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவனாகவும், உறவாகவும், மகனாகவும், அண்ணனாகவும், தம்பியாகவும், ஒவ்வொரு இல்லத்திலும் உள்ளத்திலும் நிரந்தர இடத்தை வழங்கி, தாயன்புடன் என்னை தாங்கி வருகின்றீர்கள்.
எல்லாவற்றையும் வழங்கிய ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும், உலகத் தமிழ் உறவுகளுக்கும் எனது நன்றியை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது என்று யோசித்தோம். அதன் வெளிப்பாடாகவும், உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் நோக்கத்திலும் 2024-ம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினோம்.
மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் அரசியல் களம் கண்ட நமக்கு 27 மாதங்கள்தான் ஆகின்றன. ஆனால், அதற்குள் தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை எவருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயத்தை கடந்த சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் நிகழ்த்திக் காட்டினீர்கள்.
35 சதவீத வாக்குகளுடன் த.வெ.க.வை தனிப்பெரும் கட்சியாக உயர்த்திப் பிடித்தீர்கள். உங்கள் தீர்ப்பை மதித்த ஜனநாயக சக்திகளின் ஆதரவுடன், இன்று தமிழக மக்களின் முதல் சேவகனாக முதல்-அமைச்சராக உங்கள் விஜய் இருக்கிறார்.
ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை லட்சியமாகக் கொண்டு, மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியை அமைத்து, தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்சியை நிறுவியுள்ளோம்.
மக்களே... என் சொந்தங்களே...
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பேரதிசயத்தை நீங்கள் நிகழ்த்திக் காட்டியுள்ளீர்கள். அதன் வெளிப்பாடாக, இந்தியத் தேர்தல் ஆணையம் உங்கள் தமிழக வெற்றிக் கழகத்தை தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது.
ஜனநாயகப் புரட்சியை சத்தமில்லாமல் நிகழ்த்திய உங்கள் ‘விசில்’ சின்னத்தையும் த.வெ.க.வின் சின்னமாக அங்கீகரித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் நம்மை நம்புகிற ஒட்டுமொத்த மக்களுக்கான நன்றிக்கடன் பணியானது என்றென்றும் தொடரும்.
இந்த வேளையில், பேருழைப்பை வழங்கி கழகத்தை காக்கும் தோழர்களையும் நிர்வாகிகளையும் நெகிழ்வுடன் நினைத்துப் பார்க்கிறேன்.
அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!
இவ்வாறு விஜய் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.



