தலைமைச் செயலகத்திற்கு ரூ.1,200 கோடியா? நயினார் நாகேந்திரன்
11 புரட்டாசி 2026 வெள்ளி 06:08 | பார்வைகள் : 205
சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்ற தவெக அரசின் அறிவிப்பு, கள யதார்த்தத்துக்கு சற்றும் பொருந்தாதது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
**இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:**
சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடியில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்ற தவெக அரசின் அறிவிப்பு, கள நிலவரத்துக்கு சற்றும் பொருந்தாததாக உள்ளது. நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டடமே ரூ.900 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், முறையான வரைபடம் அல்லது திட்டமிடல் இல்லாமல் ரூ.1,200 கோடி என அறிவித்திருப்பது வெறும் கற்பனையே தவிர வேறில்லை.
20 லட்சம் சதுர அடி கட்டடத்துக்கு தேவையான உள்கட்டமைப்புடன் சேர்த்து 45 ஏக்கர் நிலம் தேவைப்படும் சூழலில், பட்டினப்பாக்கத்தில் வெறும் 25 ஏக்கர் மட்டுமே உள்ளது. கிண்டியில் 35 ஏக்கர் மாற்று நிலம் இருந்தபோதிலும், முதல்வர் விஜய்யின் வீட்டுக்கு அருகில் தலைமைச் செயலகத்தை அமைக்க வேண்டும் என்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்த நடைமுறைச் சாத்தியமற்ற திட்டம், சட்டத்தின் முன் ஒருபோதும் நிற்க முடியாத வெறும் மணல் கோட்டையாகும்.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், முள்ளிக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் 1,500-க்கும் மேற்பட்ட பூர்வீக மீனவக் குடும்பங்களின் நிலங்கள் பறிபோகும் அபாயம் உள்ளது. தேர்தலின்போது பட்டா வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது தங்களை தவெக அரசு அப்புறப்படுத்த முயற்சிப்பதாக மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்தக் கடற்கரைப் பகுதி, அடையாறு சூழலியல் முகத்துவார மண்டலத்தையும், அரிய வகை ஆலிவ் ரிட்லி ஆமைகளின் முக்கிய இனப்பெருக்க வாழ்விடத்தையும் கொண்டுள்ளது. எனவே, கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) விதிகளுக்கு முரணாக கட்ட முயற்சிக்கப்படும் இந்தக் கட்டடமும் சட்டத்தின் முன் நிற்க முடியாத ‘மணல் கோட்டையாகவே’ இருக்கும்.
இந்தத் திட்டத்தால் சாந்தோம், பட்டினப்பாக்கம், ராஜா அண்ணாமலைபுரம் மற்றும் அடையாறு வழியாக தினந்தோறும் பயணிக்கும் பல்லாயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையான போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அனைத்துத் தரப்பு மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், முதல்வரின் தனிப்பட்ட சௌகரியத்திற்காக மக்கள் நலனை பலிகடா ஆக்கும் இந்த ‘துக்ளக் தர்பார்’ திட்டத்தை முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
இல்லையெனில், இத்திட்டத்தை எதிர்த்து மீனவ மக்களுடன் இணைந்து தீவிர போராட்டங்களை முன்னெடுக்கவும் தமிழக பாஜக தயங்காது.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.



