ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு
11 புரட்டாசி 2026 வெள்ளி 07:10 | பார்வைகள் : 229
ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
**அரசு பிணையப் பத்திரங்கள்**
தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான பங்குகள் வடிவிலான அரசு பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய உள்ளது.
இதில், 7.49 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2036-ன் ரூ.2 ஆயிரம் கோடி மறுவெளியீடும், 7.62 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2041-ன் ரூ.2 ஆயிரம் கோடி மறுவெளியீடும், 7.70 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2051-ன் ரூ.2 ஆயிரம் கோடி மறுவெளியீடும் அடங்கும்.
**ஏலம்**
இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் செப்டம்பர் 15, 2026 அன்று நடத்தப்பட உள்ளது.
போட்டி ஏலக் கேட்புகள் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் காலை 10.30 மணி முதல் 11 மணி வரையிலும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையான (Reserve Bank of India Core Banking Solution - E-Kuber System) மின்னணு முறையில் செப்டம்பர் 15, 2026 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



