லண்டனில் அஜித் பங்கேற்கும் கார் பந்தயம்; துவக்கி வைக்கிறார் முதல்வர் விஜய்

லண்டனில் அஜித் பங்கேற்கும் கார் பந்தயம்; துவக்கி வைக்கிறார் முதல்வர் விஜய்

11 புரட்டாசி 2026 வெள்ளி 08:13 | பார்வைகள் : 321


லண்டனில் நடைபெறும் பிரபல கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, அரசு முறைப் பயணமாக முதல்முறையாக இன்று வெளிநாடு செல்கிறார். இன்று இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் அவர், துபாய் சென்று, அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் நாளை லண்டன் சென்றடைய உள்ளார். அங்கு முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கிறார்.

லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதல்வர் விஜய், தனது 6 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு 17-ம் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறார்.

இந்த நிலையில், இந்த வார இறுதியில் லண்டனில் நடைபெற உள்ள சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தில் முதல்வர் விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அன்றைய போட்டியை பச்சைக் கொடியசைத்து முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக லீ மான்ஸ் கப் (Le Mans Cup) நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘ஆட்டோமொபைல் கிளப் டி எல் ஓவெஸ்ட்’ என்ற அமைப்பின் சார்பில் நடத்தப்படும் இந்த கார் பந்தயம் சர்வதேச அளவில் பிரபலமானதாகும். இதில் மொத்தம் 44 அணிகளைச் சேர்ந்த கார் பந்தய வீரர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த கார் பந்தய வீரரும், நடிகருமான அஜித்தும் இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

தமிழகத்தில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்று முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவித்திருந்தார். இந்நிலையில், லண்டனில் நடைபெறும் இந்த கார் பந்தயத்தை பார்வையிடும் அவர், அங்குள்ள சர்வதேச தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகளையும் நேரில் பார்வையிடுகிறார்.
 

தொடர்ந்து படிக்க