ஜெர்மனி அதிபருடன் மோடி பேச்சு; உறவை வலுப்படுத்த உறுதி

ஜெர்மனி அதிபருடன் மோடி பேச்சு; உறவை வலுப்படுத்த உறுதி

11 புரட்டாசி 2026 வெள்ளி 11:01 | பார்வைகள் : 191


வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் இந்தியா-ஜெர்மனி இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த ஜெர்மனி அதிபர் பிரைட்ரிக் மெர்ஸுடன் உறுதி கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியும், ஜெர்மனி அதிபர் பிரைட்ரிக் மெர்ஸும் தொலைபேசி மூலம் உரையாடினர். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

ஜெர்மனி அதிபருடன் ஆக்கப்பூர்வமான மற்றும் பயனுள்ள உரையாடலை மேற்கொண்டேன். இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே தூதரக உறவுகள் ஏற்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, தூய்மையான எரிசக்தி, மேம்பட்ட தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த உறுதி கொண்டுள்ளோம்.

ஐரோப்பாவுடனான இந்தியாவின் உறவில் ஜெர்மனி முக்கிய தூணாக விளங்கி வருகிறது. அதேபோல், உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை மேம்படுத்துவதிலும் ஜெர்மனி மதிப்புமிக்க கூட்டாளியாக திகழ்கிறது.

இரு நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தியா-ஜெர்மனி இடையேயான ராஜதந்திர கூட்டாண்மையை தொடர்ந்து வலுப்படுத்துவோம்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 

தொடர்ந்து படிக்க