அமைச்சர்களின் சம்பளத்தை குறைக்க Sébastien Lecornu ஆலோசனை!!
10 புரட்டாசி 2026 வியாழன் 21:09 | பார்வைகள் : 809
அரசின் செலவுகளை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தனது அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர கொடுப்பனவுகளை குறைப்பது குறித்து பிரதமர் Sébastien Lecornu ஆலோசித்து வருகிறார். 2027ஆம் ஆண்டுக்கான அரச வரவு-செலவுத் திட்டம் தொடர்பான ஆய்வுகள் தொடங்கவுள்ள நிலையில், பிரெஞ்சு மக்களிடமும் சிக்கன நடவடிக்கைகளை எதிர்பார்க்கும் சூழலில், இது சமூக நீதிக்கான அடையாள நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. தற்போது முழுமையான அமைச்சுப் பொறுப்பில் உள்ள அமைச்சர்களுக்கு மாதம் 10,692 யூரோக்கள் மொத்த ஊதியம் வழங்கப்படுகிறது. அமைச்சர்களின் ஆலோசகர்களின் சம்பளத்தையும் குறைப்பது குறித்து Matignon பரிசீலித்து வருகிறது.
2012ஆம் ஆண்டு François Hollande ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் அமைச்சர்களின் கொடுப்பனவுகள் 30 சதவீதம் குறைக்கப்பட்டிருந்தன.அமைச்சர்களின் ஊதியம் அடிப்படை மொத்த சம்பளம், குடியிருப்பு கொடுப்பனவு மற்றும் பணிப் பொறுப்பு கொடுப்பனவு என மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. தற்போது முழுமையான அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்களுக்கு மாதம் 10,692 யூரோக்களாகவும், அரசுச் செயலர்களுக்கு 10,200 யூரோக்களாகவும் வழங்கப்படுகிறது. இதற்கு வருமான வரியும் சமூகப் பாதுகாப்பு பங்களிப்புகளும் செலுத்தப்பட வேண்டும்.
இதனிடையே, Lecornu அரசாங்கத்தின் 35 அமைச்சர்களின் ஊதியத்தை 10 சதவீதம் குறைத்தால், ஆண்டுக்கு சுமார் 456,000 யூரோக்கள் மட்டுமே அரசுக்கு சேமிக்க முடியும். இந்த தொகை குறியீட்டு ரீதியாக முக்கியமானதாக இருந்தாலும், 2025ஆம் ஆண்டில் பிரெஞ்சு அரசின் பற்றாக்குறை 124 பில்லியன் யூரோக்களாக இருந்த நிலையில், அதன் தாக்கம் மிகவும் குறைவாக இருக்கும் என எதிர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.



