அமெரிக்க தூதரகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – சந்தேகநபர் கைது!!
11 புரட்டாசி 2026 வெள்ளி 06:57 | பார்வைகள் : 876
பரிஸ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது செப்டம்பர் மாதம் 10ம் திகதி வியாழக்கிழமை காலை ஒருவர் ‘cocktail Molotov’ எனப்படும் பெட்ரோல் குண்டை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Avenue Gabriel பகுதியில் உள்ள தூதரகத்தின் அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை. தூதரகத்தின் வெளிப்புறச் சுவரில் சிறிதளவு கரும்புகை மட்டுமே படிந்ததாக விசாரணைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் இடம்பெற்ற இடத்திலேயே சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தீவிர சுற்றுச்சூழல் இயக்கங்களுடன் தொடர்புடையவராகக் கருதப்படும் அவர், தனது செயலுக்கான காரணம் குறித்து இதுவரை எதுவும் தெரிவிக்க மறுத்துள்ளார். எனினும், சர்ச்சைக்குரிய Duplomb விவசாயச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்தச் செயலில் ஈடுபட்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகநபருக்கு மனநலப் பிரச்சினைகள் இருக்கலாம் என்றும், ஏற்கனவே மிரட்டல் தொடர்பான வழக்குகளில் அவர் சட்டரீதியாக பொறுப்பேற்க முடியாத நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலேயே தனது உடைகளைப் பயன்படுத்தி திரியை தயாரித்து தீப்பற்றும் சாதனத்தை உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பல காவல்துறை குழுக்கள் சம்பவ இடத்துக்குச் சென்று அந்தப் பகுதியை பாதுகாப்புக்குள் கொண்டு வந்தன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.



