வணிக வளாகம் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் - 05 பேர் உயிரிழப்பு, 67 பேர் காயம்
11 புரட்டாசி 2026 வெள்ளி 08:06 | பார்வைகள் : 224
உக்ரேனின் ட்னிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பவ்லோகிராட் நகரின் மையப் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 08 சிறுவர்கள் உட்பட 67 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மக்கள் நடமாட்டம் அதிகமிருந்த பகல் நேரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரேனிய உள்நாட்டு அமைச்சர் இவான் விஹிவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட கட்டடங்களில் 90 சதவீதம் வணிக நிறுவனங்கள் மற்றும் வர்த்தகக் கடைகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த 67 பேரில் 04 வயது சிறுமிகள் இருவரும், 11, 13, 14, 15 மற்றும் 17 வயதுடைய சிறுவர்களும் அடங்குவர் என ட்னிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்திய ஆளுநர் ஒலெக்சாண்டர் ஹன்ஷா அறிவித்துள்ளார்.
இவ்வார ஆரம்பத்தில் ஜபோரிழியா மற்றும் சுமி நகர வணிக வளாகங்கள் மீதும் ரஷ்யா இவ்வாறான வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருந்தது.
கருங்கடல் பகுதியிலுள்ள ரஷ்யாவின் பிரபல சுற்றுலா நகரமான சோச்சி மீது உக்ரேன் நடத்திய கடல்சார் ட்ரோன் தாக்குதலில் 28 பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தூதர்கள் மாஸ்கோ மற்றும் கீவ் நகரங்களில் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், அமைதி முயற்சிகளில் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



