சாலமன் பாப்பையா காலமானார்
11 புரட்டாசி 2026 வெள்ளி 14:20 | பார்வைகள் : 366
### பட்டிமன்றங்கள் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த பேராசிரியர் சாலமன் பாப்பையா காலமானார்
மதுரையைச் சேர்ந்த பிரபல பட்டிமன்றப் பேச்சாளரும், தமிழறிஞரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா (90) இன்று (செப். 11) மதுரையில் காலமானார். வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் உயிரிழந்தார்.
தமிழகத்தின் புகழ்பெற்ற தமிழறிஞராகவும், பட்டிமன்ற நடுவராகவும், பேராசிரியராகவும் விளங்கிய சாலமன் பாப்பையா, எளிய தமிழில் ஆழமான கருத்துகளை நகைச்சுவையுடன் எடுத்துரைத்து, பட்டிமன்ற நிகழ்ச்சிகளை பாமர மக்களிடமும் கொண்டு சேர்த்தவர்.
1936-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சாத்தங்குடி கிராமத்தில் பிறந்தார். பல ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றிய இவர், திருக்குறளுக்கு எளிய முறையில் உரை எழுதி வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'முதல்வன்', 'பாய்ஸ்', 'சிவாஜி' உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் சாலமன் பாப்பையா நடித்துள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சிகளில் பட்டிமன்றங்களை நடத்தி வந்த இவர், உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பட்டிமன்றங்களுக்கு நடுவராகவும் இருந்துள்ளார்.
தமிழ் இலக்கியத்துக்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி, மத்திய அரசு கடந்த 2021-ம் ஆண்டு சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. அவரது மறைவு செய்தி அறிந்த பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
### தலைவர்கள் இரங்கல்
**கவர்னர் அர்லேகர்:**
பிரபல தமிழ் பட்டிமன்றப் பேச்சாளரும், தமிழறிஞரும், தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டின் சிறந்த பேச்சாளருமான சாலமன் பாப்பையா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
தனது சிறப்பான பேச்சாற்றல், நகைச்சுவை உணர்வு மற்றும் ஆழ்ந்த தமிழ் அறிவால் பொதுமக்களின் சிந்தனையை வளப்படுத்தியதுடன், தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் சிறப்பை பல தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர்.
அவரது மறைவு தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டு உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினர், உறவினர்கள், அபிமானிகள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
**முதல்வர் விஜய்:**
தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த துயரமும் வேதனையும் அடைந்தேன்.
நகைச்சுவை கலந்த பேச்சாலும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையாலும் சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்தவர் சாலமன் பாப்பையா. பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாக இல்லாமல், சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் அவரது பங்கு மகத்தானது.
அவரது மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
**திமுக தலைவர் ஸ்டாலின்:**
சிரித்த முகம், சிந்தையைக் கவரும் தமிழ், மதுரை மண்ணின் மணம் ஆகியவற்றால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பைப் பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன்.
திருக்குறளுக்கு உரை கண்டவர், புறநானூற்றுக்குப் புதிய வரிசை கண்டவர், கம்பனையும் ஆய்ந்தறிந்தவர் என பண்டைத் தமிழ் இலக்கியத்தில் சிறந்து விளங்கியதோடு, எளிய மொழியில் நகைச்சுவையாகப் பேசும் திறனையும் கொண்டிருந்தவர் பாப்பையா.
தற்கால மதுரையின் பெருமைமிகு அடையாளமாகவே மாறியவர். 'பாப்பையா பரம்பரை' என்று சொல்லத்தக்க அளவுக்கு தன்னைப் போலவே பல பேச்சாளர்களை தமிழுக்குக் கொடையாகத் தந்தவர். அவர் இன்று நம்மை விட்டுப் பிரிந்ததை மனம் ஏற்க மறுக்கிறது.
தனது அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள். பேராசிரியர் சாலமன் பாப்பையாவை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், மதுரை மக்களுக்கும், உலகெங்கும் வாழும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
**அதிமுக பொதுச் செயலர் இபிஎஸ்:**
தமிழின் இனிமையையும், பட்டிமன்றத்தின் சிறப்பையும் தனது தனித்துவமான பேச்சாற்றல் மூலம் உலகெங்கும் கொண்டு சேர்த்த தமிழறிஞர், பேராசிரியர், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
நகைச்சுவை கலந்த பேச்சால் மக்களைச் சிரிக்க வைத்ததுடன், தமிழ் மொழியின் பெருமையையும், நமது பண்பாட்டின் சிறப்பையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா.
அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றத் துறைக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்.
**நடிகர் ரஜினிகாந்த்:**
படித்தவர்களிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமர மக்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.



