40 நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி

40 நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி

12 புரட்டாசி 2026 சனி 06:18 | பார்வைகள் : 197


2014-ம் ஆண்டு முதல் 40 நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை இந்தியா மேற்கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

**21 நாடுகள்**

டில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் அமைப்பின் தொழில்மன்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

பிரிக்ஸ் அமைப்பின் தொழில்மன்ற கூட்டத்திற்கு அனைவரையும் வரவேற்கிறேன். இந்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பு தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2006-ம் ஆண்டு இந்த அமைப்பு தொடங்கப்பட்டபோது 4 நாடுகள் மட்டுமே இருந்தன. தற்போது நமது குடும்பம் விரிவடைந்து 21 நாடுகளைக் கொண்டதாக உள்ளது.

இன்று உலக மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் பிரிக்ஸ் அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளில் உள்ளனர். உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதமும், உலகளாவிய வர்த்தகத்தில் 25 சதவீதமும் பிரிக்ஸ் நாடுகளிடம் உள்ளது.

சர்வதேச ஜிடிபி 2.5 மடங்கு உயர்ந்துள்ள நிலையில், பிரிக்ஸ் அமைப்பின் ஜிடிபி 5 மடங்கு உயர்ந்துள்ளது. உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைவிட பிரிக்ஸ் அமைப்பின் பொருளாதாரம் இரு மடங்கு உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் தீர்வுகளுக்கான மையமாக பிரிக்ஸ் அமைப்பு உருவெடுத்து வருகிறது.

**துடிப்பான சந்தை**

கடந்த 5 ஆண்டுகளில் உலகின் ஜிடிபியில் 40 சதவீதம் பிரிக்ஸ் நாடுகளுக்கு சொந்தமானதாக உள்ளது. அதே காலகட்டத்தில் ஜி7 நாடுகளின் பங்கு 29 சதவீதம் மட்டுமே. அப்படியிருக்க, கிரேட் 7 நாடுகள் என ஏன் அழைக்கின்றனர் என்பது தெரியவில்லை.

இதே காலகட்டத்தில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் பாதியளவு பிரிக்ஸ் அமைப்பின் நாடுகளுடையதாக உள்ளது. ஆனால், ஜி7 நாடுகளின் பங்கு 18 சதவீதம் மட்டுமே. உலக மக்கள் தொகையில் பாதியளவு பிரிக்ஸ் நாடுகளில் இருப்பதாலேயே இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நம்மிடம் துடிப்பான மற்றும் சிறந்த உள்நாட்டு சந்தைகள் உள்ளன.

மீள்திறனைப் பொறுத்தவரை, எரிசக்தி முதல் தொழில்நுட்பம் வரையிலான துறைகளை உள்ளடக்கிய விநியோகச் சங்கிலிகளை இந்தியா மேலும் நம்பகமானதாக மாற்றியுள்ளது. இதன் காரணமாக, உலகளாவிய நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியிலும் வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான உறுதியை இந்தியா அளித்து வருகிறது.

சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை வேகமாக விரிவுபடுத்தி வருகிறோம். கப்பல் கட்டுமானம், செமிகண்டக்டர், குவாண்டம் தொழில்நுட்பம், முக்கிய கனிமங்கள் மற்றும் உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் புதிய திறன்களை உருவாக்கி வருகிறோம்.

**பொருளாதார பாலம்**

உலகளவில் வர்த்தகத் தடைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா பொருளாதார பாலங்களை உருவாக்கி வருகிறது. 2014-ம் ஆண்டு முதல் 40 நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை செய்துள்ளோம்.

தடைகளை குறைப்பதிலும், வணிகங்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதிலும் இந்தியாவின் அணுகுமுறை தொடர்ந்து கவனம் செலுத்துகிறது. இதன் அடிப்படையில், பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கீழ் விவசாயம், சுகாதாரம், திறன் மேம்பாடு மற்றும் ஸ்மார்ட் கிரிட்கள் உள்ளிட்ட துறைகளில் புதிய ஒத்துழைப்பு கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம்.

கடல் வழித்தடங்கள் பாதுகாப்பாகவும், விநியோகப் பாதைகள் தடையின்றியும் பாதுகாப்பாகவும் இருக்கும்போது மட்டுமே வர்த்தக முன்னேற்றம் சாத்தியமாகும். எனவே, கடல்சார் போக்குவரத்துக்கான சுதந்திரம் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பை இந்தியா ஆதரிக்கிறது.

பிரிக்ஸ் பெண்கள் வணிக கூட்டமைப்பும் எங்களின் தொலைநோக்குப் பார்வையின் முக்கிய அங்கமாகும். நமது வளர்ச்சிப் பயணத்தை பெண் தொழில்முனைவோர்கள் முன்னின்று வழிநடத்த வேண்டும்.

இந்தியாவில் நடைபெற்ற இந்த கூட்டமைப்பின் கூட்டத்தில் 200 பெண் வணிகர்கள் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
 

தொடர்ந்து படிக்க