பிரிக்ஸ் உச்சி மாநாடு: பலத்த பாதுகாப்பு வளையத்தில் டில்லி
12 புரட்டாசி 2026 சனி 07:22 | பார்வைகள் : 215
டில்லியில் இன்று தொடங்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டை முன்னிட்டு, தலைநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநகரின் பல்வேறு சாலைகளில் வாகனப் போக்குவரத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
டில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நாளை (செப். 12) தொடங்கி, நாளை மறுநாள் நிறைவடைகிறது. மாநாட்டில் பங்கேற்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் டில்லிக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று அதிகாலை டில்லி வந்தடைந்தார். ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ராமபோசா, எகிப்து அதிபர் அப்தெல் பத்தாக் எல்சிசி, அபுதாபி இளவரசர் முஹமது பின் சயீத் அல் நஹ்யான், ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலர் அன்டோனியா குட்டரெஸ், உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஆகியோரும் டில்லி வந்தடைந்துள்ளனர்.
உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் டில்லியில் முகாமிட்டுள்ள நிலையில், மாநகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டில்லி முழுவதும் 15,000 போலீசாரும், 200 துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாநகர் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
மிக முக்கிய பிரமுகர்கள் பயணிக்கும் வழித்தடங்களில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பல சாலைகளில் வாகனங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன. முக்கியச் சாலைகளில் போலீஸ் உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டதுடன், பல்வேறு முகமைகள் மற்றும் அண்டை மாநிலங்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டங்களையும் நடத்தியுள்ளனர்.
விமான நிலையம், தங்கும் விடுதிகள், பாரத் மண்டபம் மற்றும் பிரமுகர்கள் செல்லக்கூடிய சுற்றுலாத் தலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புதுடில்லி மாவட்டத்தில் உயர்-தெரிவுத்திறன் கொண்ட கேமராக்கள், முகத்தை அடையாளம் காணும் அமைப்புகள், வாகன எண்ணைப் பதிவு செய்யும் கேமராக்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன.
உச்சி மாநாடு நடைபெறும் பாரத் மண்டபம் மற்றும் வெளிநாட்டுத் தலைவர்கள் தங்கும் விடுதிகளில் மேம்படுத்தப்பட்ட அணுகல் கட்டுப்பாடு, சரிபார்ப்பு, உளவுத் தகவல் சேகரிப்பு, போக்குவரத்து நிர்வாகம் மற்றும் அவசரகால நடவடிக்கை அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
டில்லியில் இன்றும் நாளையும் மதுரா சாலை, சர்தார் படேல் மார்க், சாந்தி பாதை, ஜன்பத், அசோகா சாலை, பாரக்கம்பா சாலை, டால்ஸ்டாய் மார்க், ஆப்பிரிக்க அவென்யூ சாலை, நீதி மார்க், பஞ்சசீல் மார்க் மற்றும் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் சாலை உள்ளிட்ட 35 சாலைகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக டில்லி மாநகர போலீஸ் தெரிவித்துள்ளது.
நொய்டா மற்றும் மத்திய டில்லி இடையிலும், கிழக்கு டில்லி மற்றும் மத்தியப் பகுதிகளுக்கு இடையிலும் பயணிப்போர், துவாரகா மற்றும் மேற்கு டில்லியில் இருந்து தவுலா குவான், விமான நிலையம் மற்றும் தெற்கு டில்லி செல்வோர், போக்குவரத்துக் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாகேத்தில் உள்ள விடுதிக்கும் மத்திய டில்லிக்கும் இடையே எகிப்து நாட்டு பிரமுகர்கள் பயணிக்கும் நேரத்தில், தெற்கு டில்லியின் சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்படும். பிரிக்ஸ் உச்சி மாநாட்டை கருத்தில் கொண்டு, டில்லி மக்கள் இரண்டு நாட்களும் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
உலக நாடுகளின் தலைவர்கள் ஒவ்வொருவரும் பயணிக்கும் போது தனித்தனி போக்குவரத்து ஒழுங்குமுறை, அணுகல் கட்டுப்பாடுகள் மற்றும் வழித்தட ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. இதனால், வி.ஐ.பி. வருகையின்போது ஏற்படும் பாதிப்பைவிட அதிகளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டில்லி மெட்ரோ வழக்கம்போல் தொடர்ந்து இயங்கும். இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக தேவைப்பட்டால் சில மெட்ரோ நிலையங்கள் அல்லது நுழைவு, வெளியேறும் வாயில்கள் தற்காலிகமாக மூடப்படலாம்.
இதேபோல், டில்லி மாநகரப் பேருந்துகளும் வழக்கம்போல் இயக்கப்படும். ஆனால், போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள சாலைகளில் செல்லும் பேருந்துகளின் வழித்தடங்கள் மாற்றப்படலாம். ஆட்டோ, டாக்ஸி மற்றும் மொபைல் போன் செயலி அடிப்படையிலான வாடகைக் கார் சேவைகள் தொடர்ந்து இயங்கும். எனினும், கட்டுப்படுத்தப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் அவை அனுமதிக்கப்படாது.
மேலும், யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வு முகமை ஆகியவற்றின் தேர்வுகளை எழுதச் செல்வோர் முன்கூட்டியே புறப்பட வேண்டும் என போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
மருத்துவமனைக்குச் செல்வோரும் தங்களது பயண வழிகளை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால், அருகிலுள்ள போக்குவரத்துப் பிரிவு போலீஸ் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உரிய உதவியைப் பெறலாம். கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள சாலைகளில் பால், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
### ஜொலிக்கும் தலைநகரம்
பிரிக்ஸ் உச்சி மாநாட்டை முன்னிட்டு தலைநகர் டில்லி முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. முக்கியச் சாலைகளின் சந்திப்புகளில் வண்ண விளக்குகள் மற்றும் மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளதால் அவை ஜொலிக்கின்றன. அழகுபடுத்தப்பட்ட சாலைகள் மற்றும் பிரிக்ஸ் மாநாட்டு அறிவிப்புப் பலகைகளால் மத்திய டில்லி புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.
படேல் சவுக், விண்ட்சர் பிளேஸ், மண்டி ஹவுஸ், தீன் மூர்த்தி, லோக் கல்யாண் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் பிரதமர் அலுவலக சந்திப்பு சாலை உள்ளிட்ட பகுதிகள் அலங்கார விளக்குகளால் ஜொலிக்கின்றன.
புதுடில்லி மாநகராட்சி சார்பில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் சின்னம் பொறிக்கப்பட்ட எல்.இ.டி. பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. முக்கிய வழித்தடங்களில் உள்ள தெருவிளக்குக் கம்பங்களில் பிரிக்ஸ் மாநாட்டு பதாகைகளும் தொங்கவிடப்பட்டுள்ளன.
விமான நிலையம் மற்றும் உலக நாடுகளின் தலைவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நட்சத்திர ஹோட்டல்களை, நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பாரத் மண்டபத்துடன் இணைக்கும் வழித்தடங்களுக்கு முன்னுரிமை அளித்து அனைத்து சாலைகளும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. சாலையோர பூங்காக்களும் பசுமையாக காட்சியளிக்கின்றன.
டில்லியில் 17 முக்கிய வட்டச் சந்திப்புகள், 12 ஹோட்டல் வளாகங்கள் மற்றும் 10 முக்கிய கட்டடங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டுத் தலைவர்கள் தங்கும் ஹோட்டல்களைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் முக்கியச் சாலைகளின் ஓரங்களில் உள்ள மரங்கள், புதர்கள் மற்றும் அழகுபடுத்தப்பட்ட பகுதிகளிலும் அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
சாலையோரங்களில் உள்ள 350 மின்சார கட்டுப்பாட்டுப் பெட்டிகள் பிரிக்ஸ் கருப்பொருள் கொண்ட வடிவமைப்புகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், 15 இடங்களில் மலர் அலங்காரப் பலகைகளும், 9 இடங்களில் மலர் நீரூற்றுகளும் அமைக்கப்பட்டுள்ளன. முக்கியச் சாலைகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பயணிக்கும் சாலைகளின் இருபுறமும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2016-ம் ஆண்டு டில்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றபோது சாணக்யபுரியில் உருவாக்கப்பட்ட 107 வகையான ரோஜா செடிகளைக் கொண்ட பிரிக்ஸ் நட்பு ரோஜாத் தோட்டமும் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
டில்லி மாநகராட்சி மற்றும் பொதுப்பணித் துறை ஆகியவை இணைந்து பாரத் மண்டபம், சாராய் காலே கான், லோதி சாலை, நிஜாமுதீன், சாகேத் மற்றும் ஷேக் சராய் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் விரிவான அலங்காரப் பணிகளை மேற்கொண்டுள்ளன.



