கூட்டணி கட்சி தலைவர்களுடன் மேடையேறும் விஜய்
12 புரட்டாசி 2026 சனி 08:24 | பார்வைகள் : 216
இடைத்தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில், முதல்வர் விஜய் மற்றும் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
த.வெ.க. தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., வி.சி.க. மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டசபை தொகுதிகளில் அக். 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால், த.வெ.க. தலைமையிலான அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். இதற்காக மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பொதுக்கூட்டங்களில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் முதல்வர் விஜயும் பங்கேற்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ விருப்பம் தெரிவித்துள்ளார். இதனை முதல்வர் விஜய் ஏற்றுக்கொண்டுள்ளார்.
**த.வெ.க. நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:**
கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஒரே மேடையில் இணைந்து பிரசாரம் செய்வது, கூட்டணியின் ஒற்றுமையை வாக்காளர்களிடம் வெளிப்படுத்தும். மேலும், இந்த பொதுக்கூட்டங்கள் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெறும்.
முதல்வர் விஜயின் பிரசாரத்தை மக்கள் எதிர்பார்ப்பார்கள். அவர் முதல்வரான பிறகு தங்களைத் தேடி வருகிறாரா என்ற எதிர்பார்ப்பும் மக்களிடம் இருக்கும்.
எனவே, முதல்வர் விஜய் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் இணைந்து பிரசாரம் மேற்கொள்வது, இடைத்தேர்தல் வெற்றியை எளிதாக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.



