ஏஐ தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஏஐ தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

12 புரட்டாசி 2026 சனி 09:27 | பார்வைகள் : 180


செயற்கை நுண்ணறிவு (ஏஐ) என்பது இருமுனை வாள் போன்றது என்றும், அது மோசடிகளைக் கண்டறிவதற்கும், அதே நேரத்தில் மோசடிகளை மேற்கொள்வதற்கும் உதவுகிறது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

இந்திய இளைஞர்கள் தொழில்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களை உருவாக்கி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகமாக முன்னெடுத்துச் செல்கின்றனர்.

இந்திய ரிசர்வ் வங்கி தனது டிஜிட்டல் ரூபாய் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும். மொத்த மற்றும் சில்லறை விற்பனைக்கான மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி பயன்பாட்டையும் மேம்படுத்த வேண்டும்.

உலகின் மிக சக்திவாய்ந்த டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பை இந்தியா உருவாக்கியுள்ளது. யுபிஐ மூலம் பல கோடிக்கணக்கான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொழில்நுட்பத்தால் ஏற்படும் அபாயங்களைக் கட்டுப்படுத்தும் அதே நேரத்தில், புதுமைகளை பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நாட்டின் இளம் திறமையாளர்கள் தங்கள் மீதான அவநம்பிக்கைகளை கடந்து, வெற்றிகரமாக தொழில்களை உருவாக்கி முன்னேறி வருகின்றனர்.

தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் துறைகளில் இளைஞர்களின் பங்களிப்பு, 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான வேகத்தை நிர்ணயிக்கும் வகையில் அமைந்துள்ளது.

எதிர்மறையான கருத்துகளைத் தவிர்த்து, இந்த மாற்றத்தை நாம் கொண்டாட வேண்டும். செயற்கை நுண்ணறிவு (ஏஐ) இருமுனை வாள் போன்றது. அது மோசடிகளைக் கண்டறியவும் உதவுகிறது; அதே நேரத்தில் மோசடிகளைச் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

தொடர்ந்து படிக்க