2027ல் அறிமுகமாகிறது டிஜிட்டல் சுங்க கட்டண முறை
12 புரட்டாசி 2026 சனி 12:37 | பார்வைகள் : 172
2027-ம் ஆண்டு மார்ச்சுக்குள் நாடு முழுவதும் முழுமையான டிஜிட்டல் முறையிலான சுங்கக்கட்டண வசூல் நடைமுறை கொண்டு வரப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:
தொழில்நுட்பத்தின் உதவியுடன் சுங்கக்கட்டணத்தை வசூலிக்கும் முறையை நோக்கி அரசு நிர்வாகம் முன்னேறி வருகிறது. பாஸ்டேக்கை வாகனத்தின் பதிவு எண்ணுடன் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நடைமுறை சுங்கக்கட்டண வசூலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
வாகன பதிவு எண் மற்றும் பாஸ்டேக் ஆகிய இரண்டையும் அடிப்படையாகக் கொண்ட சுங்கக்கட்டண வசூல் முறையின் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.10,000 கோடி வருவாய் கிடைக்கும். முன்பு சுங்கச்சாவடிகளில் 12 நிமிடங்கள் வரையிலும், சில நேரங்களில் 30 நிமிடங்கள் வரையிலும் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. பாஸ்டேக் முறை அறிமுகமான பிறகு இந்தக் காத்திருப்பு நேரம் குறைந்துள்ளது.
மேலும் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில், தொழில்நுட்பத்தின் மூலம் டிஜிட்டல் முறையை அரசு நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. தடையற்ற டிஜிட்டல் சுங்கக்கட்டண வசூல் முறையின் முக்கிய நோக்கம், வாகனங்கள் நிற்க வேண்டிய நிலையை அகற்றுவதாகும். இதன் மூலம் எரிபொருள் பயன்பாடு மற்றும் பயண நேரத்தை சேமிக்க முடியும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் 60 முதல் 70 சதவீத பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் தடையற்ற சுங்கச்சாவடி கட்டண வசூல் முறை கொண்டு வரப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.



