பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியா துணை நிற்கும்; பிரதமர் மோடி
12 புரட்டாசி 2026 சனி 13:40 | பார்வைகள் : 194
அமெரிக்காவில் நடைபெற்ற 9/11 பயங்கரவாத தாக்குதலின் 25-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா தொடர்ந்து துணை நிற்கும் என அவர் உறுதியளித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பயங்கரமான 9/11 தாக்குதல்கள் நிகழ்ந்து 25 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அதில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துகிறோம். மேலும், இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் நாங்கள் உறுதுணையாக நிற்கிறோம்.
உலகம் முழுவதும் பயங்கரவாதம் எண்ணற்ற உயிர்களைப் பலிவாங்கியுள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடான இந்தியா, பல தசாப்தங்களாக இந்தப் போராட்டத்தில் முன்னணியில் இருந்து வருகிறது.
பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் மாறி வந்தாலும், அதன் அனைத்து வடிவங்களுக்கும் எதிரான இந்தியாவின் உறுதியும் எதிர்ப்பும் ஒருபோதும் மாறாது. இந்தத் தீமையை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா முழு ஆதரவு அளிக்கும்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.



