பிரிக்ஸ் மாநாட்டுக்கு இந்தியா தலைமை தாங்குவது பெருமை: சசி தரூர்
12 புரட்டாசி 2026 சனி 14:43 | பார்வைகள் : 204
‘பிரிக்ஸ் கூட்டமைப்பால் நம் நாட்டுக்கு என்ன பயன்?’ என காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், அதே கட்சியைச் சேர்ந்த லோக்சபா எம்.பி., சசி தரூர், ‘பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை தாங்குவது பெருமைக்குரிய விஷயம். இந்த அமைப்பின் மூலம் பல்வேறு பிரச்னைகளை எடுத்துரைக்க முடியும்’ என தெரிவித்துள்ளார்.
மத்திய பா.ஜ., அரசுக்கு ஆதரவாக சசி தரூர் மீண்டும் கருத்து தெரிவித்திருப்பது, காங்கிரஸ் மேலிடத்துக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய அமைப்பு ‘பிரிக்ஸ்’ என அழைக்கப்படுகிறது. 2024-ம் ஆண்டு எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளும் இந்தக் கூட்டமைப்பில் இணைந்தன.
இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் உச்சி மாநாடு தலைநகர் டில்லியில் நாளையும், நாளை மறுநாளும் நடைபெற உள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சிதம்பரம் கருத்து தெரிவிக்கையில், ‘பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு, குவாட் என பல்வேறு கூட்டமைப்புகளில் இந்தியா அங்கம் வகிக்கிறது. ஆனால், இவற்றால் எந்தப் பயனும் இல்லை’ என்றார். இதற்கு பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
### சசி தரூர் கருத்து
இந்நிலையில், பிரிக்ஸ் மாநாடு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், லோக்சபா எம்.பி.,யுமான சசி தரூர் கூறியதாவது:
பிரிக்ஸ் கூட்டமைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை தாங்குவது மிகவும் பெருமைக்குரிய விஷயம். இந்த அமைப்பின் வாயிலாக ‘குளோபல் சவுத்’ எனப்படும் உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
எனினும், இந்த அமைப்பில் தற்போது 11 நாடுகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகள் பன்முகத்தன்மை கொண்ட கருத்துகளை ஒருங்கிணைந்து பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையையும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 41 சதவீதத்தையும் பிரிக்ஸ் நாடுகள் கொண்டுள்ளன.
சர்வதேச நாடுகளின் அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் இந்தியாவுக்கு வருகை தருவது மிகவும் பெருமைக்குரிய விஷயம். இது ஒரு குறிப்பிட்ட அளவிலான தூதரக ஈர்ப்பை வெளிப்படுத்துகிறது. உலக அரங்கில் இதற்கு தனி மதிப்பும் உள்ளது.
பிரிக்ஸ் கூட்டமைப்பால் நன்மைகள் மட்டுமே கிடைக்கின்றன என்று கூற முடியாது. அதேநேரத்தில், சில சவால்களும் இருக்கின்றன.
குறிப்பாக, உலகளாவிய பிரச்னைகளில் ஒருமித்த கருத்தை உருவாக்குவது கடினமானதாக உள்ளது. உதாரணமாக, சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் ரஷ்யா - உக்ரைன் போர், ஈரான் - அமெரிக்கா போர் உள்ளிட்ட விவகாரங்களில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இது நமது தூதர்களுக்கு உண்மையான சவாலாக இருக்கும்.
மேலும், நடைமுறை சார்ந்த பல்வேறு விஷயங்களும் உள்ளன. பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. ஆனால், பல்வேறு வழிகளில் இது இந்தியாவுக்கு நஷ்டத்தையே ஏற்படுத்துகிறது. பிரிக்ஸ் நாடுகளுக்கு இந்தியா மேற்கொள்ளும் ஏற்றுமதி குறைந்துள்ளது. அதேசமயம், அந்த நாடுகளில் இருந்து இந்தியா மேற்கொள்ளும் இறக்குமதி அதிகரித்துள்ளது.
இவ்வாறு சசி தரூர் கூறினார்.
### அம்பலம்!
காங்கிரசின் உண்மையான மனநிலையை அக்கட்சியில் உள்ள ஒருவரே வெளிப்படுத்துகிறார். ராகுல் உத்தரவுப்படியே பிரிக்ஸ் மாநாட்டுக்கு எதிராக சிதம்பரம் கருத்து தெரிவித்தார். தற்போது சசி தரூர் அவரை அம்பலப்படுத்தியுள்ளார்.
— பிரதீப் பண்டாரி, தேசிய செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,



