வார இறுதியில் போக்குவரத்தில் மாற்றம்- RER B, D தொடருந்து சேவைகளுக்கு தடை!!
11 புரட்டாசி 2026 வெள்ளி 21:01 | பார்வைகள் : 1538
பரிஸ் மற்றும் இல்-து-பிரான்ஸ் பிராந்தியத்தில் செப்டெம்பர் மாதம் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் பொதுப் போக்குவரத்து சேவைகளில் சில முக்கிய மாற்றங்கள் இடம்பெறவுள்ளன. இந்த வார இறுதியில் பாரிய அளவிலான பராமரிப்புப் பணிகள் எதிர்பார்க்கப்படாத போதிலும், RER B மற்றும் D தொடருந்து பாதைகள் பயன்படுத்தும் மத்திய சுரங்கப்பாதையில் மேற்கொள்ளப்படும் பணிகள் காரணமாக, பரிஸ் நகருக்குள் இந்த இரு சேவைகளும் இரு நாட்களும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுரங்கப்பாதையில் நடைபெறும் பணிகள் காரணமாக RER B மற்றும் D சேவைகளின் பரிஸ் நகரப் பகுதி போக்குவரத்து துண்டிக்கப்படவுள்ளது. இதனால் இந்த இரு RER பாதைகளையும் பயன்படுத்தும் பயணிகள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக நகரின் உள்பகுதியில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மாற்று பொதுப் போக்குவரத்து வழிகளைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை காலை மெட்ரோ 13ஆம் இலக்கப் பாதையிலும் சேவைத் தடங்கல் ஏற்படவுள்ளது. எனினும், ஒட்டுமொத்தமாக இந்த வார இறுதி பரிஸ் பொதுப் போக்குவரத்து வலையமைப்பில் வழக்கத்தை விட அமைதியானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்னர் சேவை நிலவரத்தை சரிபார்த்து, சாத்தியமான மாற்று வழிகளைத் தயாராக வைத்திருப்பது சிறந்தது.



