186 பயணிகளுடன் சென்ற தொடருந்து தடம் புரண்டது - 44 பேர் காயம்!!

186 பயணிகளுடன் சென்ற தொடருந்து தடம் புரண்டது - 44 பேர் காயம்!!

12 புரட்டாசி 2026 சனி 08:11 | பார்வைகள் : 1950


Rouen மற்றும் Caen நகரங்களுக்கு இடையே பயணித்த TER தொடருந்து, செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு சுமார் 19.45 மணியளவில் Seine-Maritime மாவட்டத்தின் Cléon பகுதியில் தடம் புரண்டது. தொடருந்தில் 186 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த விபத்தில் 44 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 18 வயதுடைய இளம் பெண் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் இருந்ததால், ஹெலிகொப்டர் மூலம் Rouen பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ மற்றும் உளவியல் அவசர உதவிக்குழுவும் அமைக்கப்பட்டது.

இந்த விபத்தைத் தொடர்ந்து Seine-Maritime மாவட்ட ஆளுநர் அவசரகால நடவடிக்கை மையத்தை செயல்படுத்தி, அதிக எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டவர்களுக்கான Orsec-Novi திட்டத்தைத் தொடங்கினார். சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்ததாக போக்குவரத்து அமைச்சர் Philippe Tabarot தெரிவித்தார். தொடருந்து ஓட்டுநரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், விபத்துக்கான காரணத்தை கண்டறிய Rouen அரசுத் தரப்பு விசாரணையை ஆரம்பித்துள்ளது. தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத பொருள் ஒன்றுடன் தொடருந்து மோதியிருக்கலாம் என்ற ஆரம்பகட்ட சந்தேகம் எழுந்துள்ளது.

விபத்து குறித்து பயணி Louis, கூறுகையில், முதலில் சில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும், மூன்று விநாடிகளுக்குப் பின்னர் அவை மிகவும் தீவிரமானதாக மாறியதாகவும் தெரிவித்தார். இருக்கையில் தன்னால் நிலையாக இருக்க முடியவில்லை என்றும், தொடருந்து ஜன்னல்கள் சில உடைந்து, தண்டவாளத்தில் இருந்த கற்கள் பெட்டிக்குள் புகுந்ததாகவும் அவர் கூறினார். இந்த விபத்தால் அப்பகுதியில் SNCF தொடருந்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. Paris–Rouen மற்றும் Paris–Le Havre வழித்தடங்களில் இரு திசைகளிலும் 2 மணி 30 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்பட்டது.

தொடர்ந்து படிக்க