7 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா சென்ற சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்
12 புரட்டாசி 2026 சனி 19:04 | பார்வைகள் : 255
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், இரண்டு நாள் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை (12) இந்தியாவின் புதுடெல்லியை சென்றடைந்துள்ளனர்.
இந்தியாவுக்கு அவர் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியா–சீனா உறவுகளை மீண்டும் ஸ்திரப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஷி ஜின்பிங்கின் இந்த விஜயம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இன்று சனிக்கிழமை மாலை இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர். இதன்போது வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள் முக்கியமாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷி ஜின்பிங்கின் வருகைக்கு முன்னதாக, இந்தியாவும் சீனாவும் தமது உறவுகளை மூலோபாய மற்றும் நீண்டகால கண்ணோட்டத்துடன் அணுகுவதுடன், இரு தரப்புக்கும் இடையிலான வேறுபாடுகளை உரிய முறையில் கையாள வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.
இந்திய – சீன தலைவர்களின் சந்திப்பு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடைபெறுவதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார். முன்னதாக கசான் மற்றும் தியான்ஜின் நகரங்களில் இரு தலைவர்களும் சந்தித்திருந்தனர்.
2020ஆம் ஆண்டு கிழக்கு லடாக் பகுதியில் ஆரம்பமான நீண்டகால இராணுவ முறுகலைத் தொடர்ந்து இந்தியா – சீனா உறவுகளை மீளக் கட்டியெழுப்பும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
கடந்த ஆண்டு இரு நாடுகளும் பல்வேறு நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இந்நிலையில், மோடி – ஷி சந்திப்பு இருதரப்பு உறவுகள் எதிர்காலத்தில் எவ்வாறு முன்னேறும் என்பதற்கான முக்கிய அறிகுறிகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, எல்லைப் பிரச்சினை, எல்லையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி ஆகியோர் கடந்த மாதம் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.



