எந்தப் பணி செய்தாலும் எதிர்ப்புகள் வரத்தான் செய்யும்; அமைச்சர் செங்கோட்டையன்
13 புரட்டாசி 2026 ஞாயிறு 08:42 | பார்வைகள் : 185
எந்தப் பணிகளை மேற்கொண்டாலும், எதிர்க்கட்சிகளிடம் இருந்து எதிர்ப்புகள் வருவது இயல்புதான் என்று புதிய தலைமைச் செயலக திட்டம் தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இது முதல்முறை அல்ல. நீண்ட காலமாக எதிர்க்கட்சிகள் இதுபோன்ற கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். முதலில் திமுக அந்த அலுவலகத்தை கட்டியபோது, அது இருக்கும் இடத்திலேயே இருக்கலாம் என்று கூறினர். அதன்பிறகு, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது, அந்தக் கட்டிடம் மருத்துவமனையாக மாற்றப்பட்டது.
ஜெயலலிதா இருந்தபோதே, புதிய தலைமைச் செயலகத்தை கட்ட வேண்டும் என்று ராணி மேரி கல்லூரி அருகே அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போதும் தடை ஏற்பட்டது. மத்திய அரசு மூலமாக அந்தத் தடையை எதிர்க்கட்சிகள்தான் உருவாக்கினர்.
தற்போது எந்தப் பணிகளை தொடங்கினாலும், அதற்கு எதிர்ப்புகள் வரத்தான் செய்கின்றன. தற்போது செயல்பட்டு வரும் தலைமைச் செயலகம் நான்கரை ஏக்கர் பரப்பளவில் மட்டுமே அமைந்துள்ளது. அனைத்து பணிகளையும் மேற்கொள்வதற்கு போதுமான இடவசதி இல்லாததால், புதிய தலைமைச் செயலகத்தை கட்ட வேண்டும் என்று முதல்வர் முடிவு செய்து, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஒவ்வொருவரும் தங்களது கருத்துகளை தெரிவிக்கும்போது, எந்த இடத்தில் எதை அமைத்தாலும் எதிர்ப்பு வருவது இயல்புதான். டவர் அமைத்தாலும், கட்டிடம் கட்டினாலும், பைப்லைன் அமைத்தாலும் வேண்டாம் என்று கூறுவார்கள். இது இயற்கையாகவே இருக்கும் எண்ணங்கள்தான்.
ஆனால், அனைவரும் மனம் திறந்து, புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.



