டில்லியில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு
13 புரட்டாசி 2026 ஞாயிறு 11:51 | பார்வைகள் : 166
டில்லியில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினர். அப்போது, இருதரப்பு உறவு குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜின்பிங் இன்று இந்தியா வந்தார். அவரை பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் வரவேற்றார். முதல் நாள் மாநாடு நிறைவடைந்த பிறகு, டில்லியில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினர். அப்போது, இருதரப்பு உறவு குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
அப்போது சீன அதிபர் ஜின்பிங் பேசியதாவது:
‘‘இந்தியா - சீனா இடையிலான உறவு நாளுக்கு நாள் நிலையான வளர்ச்சியை அடைந்து வருகிறது. இதுவரை இரு நாடுகளுக்கு இடையே 21 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இரு நாடுகளும் நம்மிடம் இருக்கும் பலத்தைப் பார்த்து அதிலிருந்து கற்று வருகின்றன. இந்தியாவுடன் எங்களுக்கு மிக நீண்டகால ராஜதந்திர உறவு உள்ளது.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளான இந்தியாவும், சீனாவும் வளர்ந்து வரும் நாடுகளில் முக்கிய உறுப்பினர்களாக உள்ளன. இரு நாடுகளுக்கும் குறிப்பிடத்தக்க பொறுப்புகள் உள்ளன. மக்களின் எதிர்காலம் மற்றும் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு, பிரிக்ஸ் கட்டமைப்பின் கீழ் இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும். உலக அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு நேர்மறையான ஆற்றலை வழங்க வேண்டும்’’ என்றார்.
இதனிடையே, சீன அதிபருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
‘‘பிரிக்ஸ் தலைமைத்துவத்திற்கு வழங்கிய ஆதரவுக்கும், ஒத்துழைப்புக்கும் சீனாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாநாட்டின் மூலம் இந்தியா - சீனா இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மீண்டும் அவரை இந்தியாவுக்கு மனதார வரவேற்கிறேன்’’ எனக் கூறினார்.



