பிரிக்ஸ் டில்லி பிரகடனம் ஏற்பு; தபால் தலை வெளியிட்டார் மோடி
13 புரட்டாசி 2026 ஞாயிறு 12:54 | பார்வைகள் : 183
பயங்கரவாதம் மற்றும் மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் மோடி முன்மொழிந்த பிரிக்ஸ் டில்லி பிரகடனம், அனைத்து நாடுகளாலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
டில்லியில் நடைபெற்று வரும் 18வது பிரிக்ஸ் மாநாட்டில், உலகளவில் நிலவி வரும் போர் மற்றும் ஆக்கிரமிப்பு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், ‘பேச்சுவார்த்தையும், ராஜதந்திரமும் முன்னேற்றத்திற்கான ஒரே வழி’ என்பதை மையமாகக் கொண்டு, இந்தியா பிரிக்ஸ் டில்லி பிரகடனத்தை உருவாக்கியது. இந்தப் பிரகடனம் தொடர்பாக அனைத்து நாடுகளின் தலைவர்களுடனும் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியது. இதற்கு அனைத்து நாடுகளும் சம்மதம் தெரிவித்தன.
இதையடுத்து, எந்தவொரு நாட்டின் பெயரையும் குறிப்பிடாமல், பல்வேறு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், பிரதமர் மோடி முன்மொழிந்த ‘பிரிக்ஸ் டில்லி பிரகடனம்’ அனைத்து நாடுகளின் தலைவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்தப் பிரகடனத்தின் மூலம், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரிக்ஸ் நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், எல்லை தாண்டிய பயங்கரவாதம், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் உள்ளிட்டவற்றை எதிர்த்துப் போராட தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐநாவால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை எடுக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒருதலைபட்சமான பொருளாதாரத் தடைகளுக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்காசியாவில் நிலவி வரும் பதற்றங்களுக்கு பிரிக்ஸ் நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. அந்தப் பிராந்தியத்தில் நிரந்தர அமைதி ஏற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரிக்ஸ் அமைப்பு தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, சிறப்பு தபால் தலைகளையும் பிரதமர் மோடி வெளியிட்டார். தொடர்ந்து, டில்லி பிரிக்ஸ் உச்சி மாநாட்டை நினைவுகூரும் வகையில், பாரத் மண்டபத்தில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
ஒரே பஸ்ஸில்...
பிரிக்ஸ் மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் பங்கேற்பதற்காக, மத்திய அமைச்சர்கள், பாஜ., மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் ஆகியோர் ஒரே பஸ்ஸில் பயணித்து சென்றனர்.



