அடுத்த 20 ஆண்டுகளுக்கான திட்டம்: பிரதமர் வலியுறுத்தல்

அடுத்த 20 ஆண்டுகளுக்கான திட்டம்: பிரதமர் வலியுறுத்தல்

13 புரட்டாசி 2026 ஞாயிறு 15:10 | பார்வைகள் : 194


டில்லியில் இன்று துவங்கிய 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், அடுத்த 20 ஆண்டுகளுக்கான திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட தென்னாப்பிரிக்கா, பிரேசில், ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

அனைத்து நாடுகளின் தலைவர்களையும் வரவேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:

“பிரிக்ஸ் மாநாட்டை தலைமையேற்று நடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது. நிலையான வளர்ச்சியே இந்தியாவின் தாரக மந்திரம். மக்களும், மனிதாபிமானமும் நமது முதன்மை நோக்கமாகும்.

பிரிக்ஸ் நாடுகள் அனைத்தும் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும். அனைவரையும் ஒருங்கிணைக்கும் வகையில் பிரிக்ஸ் செயல்பட்டு வருகிறது. அனைவரும் ஒன்றிணைந்து பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும். பிரிக்ஸ் அமைப்பு புதிய அடையாளத்தை பெற்றுள்ளது. இந்த அமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல. அடுத்த 20 ஆண்டுகளுக்கான திட்டங்களை உருவாக்க வேண்டும்.

ஐநா பொதுச்சபையில் தாமதமின்றி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். கடல்வழி வர்த்தகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கப்பல் மாலுமிகளின் பாதுகாப்பை எவ்வளவு விலை கொடுத்தாவது உறுதி செய்ய வேண்டும்.

வளர்ந்து வரும் நாடுகள் உலகளவில் ஏற்படும் நெருக்கடிகளால் பாதிக்கப்படுவதில் முதல் வரிசையிலும், முடிவெடுப்பதில் பின்வரிசையிலும் உள்ளன. இந்த அதிகார அமைப்பில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். விதிமுறைகளைப் பின்பற்றுபவர்களாக இல்லாமல், விதிமுறைகளை உருவாக்குபவர்களாக வளர்ந்து வரும் நாடுகள் மாற வேண்டும்” என்று பிரதமர் மோடி கூறினார்.

தொடர்ந்து படிக்க