ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் பிரிட்டன் இணைய விரும்பினால் வரவேற்போம் – ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்!!
30 புரட்டாசி 2026 புதன் 20:34 | பார்வைகள் : 2806
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிரிட்டன் மீண்டும் அந்த அமைப்பில் இணைய வேண்டும் என்ற விவாதம் மீண்டும் தொடங்கியுள்ளதை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வரவேற்றுள்ளார். பிரிட்டன் பிரதமர் Andy Burnham முன்வைத்துள்ள இந்த யோசனைக்கு ஆதரவு தெரிவித்த அவர், செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி Madrid நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஆங்கிலத்தில் “Welcome back!” எனக் குறிப்பிட்டார். பிரிட்டன் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விரும்பினால், அது அந்நாட்டுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் சிறந்த செய்தியாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் Keir Starmerக்குப் பின்னர் பதவியேற்றுள்ள தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த Andy Burnham, ஐரோப்பிய ஒன்றியத்துடனான நீண்டகால உறவை மறுபரிசீலனை செய்வதற்கான பல்வேறு தெரிவுகளை இந்த ஆண்டின் இறுதிக்குள் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டில் முன்வைக்கத் திட்டமிட்டுள்ளார். இதில் ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைவதும் ஒரு தெரிவாக இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் எப்போதும் ஐரோப்பிய நாடுகளுக்கு சிக்கல்களை எளிமைப்படுத்த உதவும் முக்கியமான, உறுதியான பங்காளியாக இருந்து வந்துள்ளதாகக் குறிப்பிட்ட மக்ரோன், இந்த விவாதத்தைத் தொடங்கியுள்ள Andy Burnhamஇன் துணிச்சலைப் பாராட்டினார். Brexit வாக்கெடுப்பு இடம்பெற்று பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையாமல் அதனுடன் நெருக்கமான உறவைப் பேணுவதில் பிரிட்டனுக்கு சில வரம்புகள் இருப்பதாக மக்ரோன் சுட்டிக்காட்டினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து சுதந்திரங்களையும் தெரிவுசெய்து, தமக்குச் சாதகமானவற்றை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.



